கோயம்புத்தூர்: பொள்ளாச்சியில் உள்ள மிகவும் பாதுகாக்கப்பட்ட ஆனைமலை புலிகள் காப்பகத்தின் (ஏடிஆர்) மைய வனப்பகுதியில், நள்ளிரவில் அதிமுக பிரமுகர் ஒருவர் அத்துமீறி நுழைந்து, இளம் காட்டு யானை ஒன்றை விரட்டியடித்துள்ளார். இந்த சம்பவம் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் (WPA) வரையறையின்படி, வேட்டையாடுவது போன்ற கடுமையான குற்றமாகும் மற்றும் அதற்கு குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.
தற்போது வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த அந்த நபர், கோட்டூரைச் சேர்ந்தவர் என்பதும், அவர் அதிமுகவைச் சேர்ந்த இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் மிதுன் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், அவர் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டஸில் பதிவேற்றிய வீடியோவில், ஹை-பீம் விளக்குகளை ஒளிரச் செய்து, பின்னால் இருந்து யானைக்கு மிக அருகில் வாகனத்தை வேகமாக ஓட்டியதால், யானை பயத்தில் ஓடுவதைக் காண முடிந்தது.
பின்னணியில் உரத்த இசையும் ஒலித்தது. முக்கிய புலிகள் காப்பக பகுதியான நவமலையில், இந்த சம்பவம் நேற்று முன்தினம் (பிப்.15) வியாழக்கிழமை இரவு நடந்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, வனத்துறையினர் அதிமுக பிரமுகர் மிதுனுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, எச்சரித்துள்ளதாக வனத்துறையினர் சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக கோவை மாவட்ட ஆனைமலை புலிகள் காப்பகம் கள இயக்குனர் ராமசுப்பிரமணியம் கூறுகையில், "அதிமுக பிரமுகருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் பணியாற்றிய வனத்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இரவு நேரங்களில் அத்துமீறி வனப் பகுதிக்குள் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.