சென்னை: அம்பத்தூர் லெனின் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயதேவ் (20). இவர் தனியார் கல்லூரியில் B.Tech 3ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் (நவ.13) ஜெயதேவ் அவரது நண்பர் ராஜாவைக் காண சென்றுள்ளார்.
அண்ணா தெரு வழியாக நடந்து சென்று கொண்டிருந்த போது, அங்கிருந்த அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவரை மிரட்டி, அருகில் உள்ள பழைய கட்டடத்திற்கு அழைத்துச் சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். ஆனால், ஜெயதேவ் பணம் தர மறுத்ததால், பீர் பாட்டிலால் தலையில் அடித்துள்ளனர். அதில் பலத்த காயமடைந்த ஜெயதேவ் கீழே விழுந்துள்ளார். பின்னர், அவரது செல்போனை எடுத்து மிரட்டி, அதிலிருந்த 'G-pay' செயலி மூலம் ரூ.29 ஆயிரத்தை அவர்களது மொபைல் எண்ணிற்கு அனுப்பிவிட்டு அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
அதனையடுத்து, பலத்த காயமடைந்த ஜெயதேவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார். பின்னர், இதுகுறித்து திருமுல்லைவாயல் காவல்நிலையத்தில் ஜெயதேவ் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த, ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: போதை ஆசாமிகளால் தொல்லை.. கேரளா பெண் ஊழியர்களுக்கு தற்காப்பு பயிற்சி திட்டம்.. பெவ்கோ நிறுவனம் முடிவு!
மேலும், அந்த பகுதியிலிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போது, 5 இளைஞர்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து, சிசிடிவி காட்சிகள் மற்றும் பணம் பரிவர்த்தனை செய்த எண்களை கொண்டு விசாரணை செய்ததில், வழிப்பறியில் ஈடுபட்டது திருமுல்லைவாயிலைச் சேர்ந்த ராஜா (22), ஜெயசூர்யா (20), கபிலேஸ்வரன் (18), ஆவடி கோயில் பதாகையைச் சேர்ந்த லலித்குமார் (22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நபர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரத்தைப் பறிமுதல் செய்த காவல் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்துள்ளனர். தற்போது, நடந்து சென்ற நபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் உட்பட 5 பேர் கைதான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்