சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நாட்டு முத்து தெருவில் மாநகராட்சியில் பணிபுரியும் சேகர் என்பவர் தனது குடும்பத்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று மாலை 5 மணி அளவில் அவரது வீட்டில் இருந்த பெண்கள் சமைத்துக் கொண்டிருந்தபோது சிலிண்டரில் இருந்து கசிவு ஏற்பட்டு சிலிண்டர் தீ பற்றி எறிந்துள்ளது.
இதனால் வீட்டில் இருந்து அனைவரும் அலறி அடித்துக்கொண்டு பயத்தில் வெளியே வந்தனர். பின்னர் சிறிது நேரத்தில், சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை அணைத்தனர்.
இருப்பினும், சிலிண்டர் வெடித்ததில் வீட்டில் இருந்த டிவி, குளிர்சாதன பெட்டி, வாஷிங் மிஷின் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் எரிந்து சேதமடைந்தன. நல் வாய்ப்பாக வீட்டில் இருந்த குழந்தை, பெரியவர்கள் உள்பட யாருக்கும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இதனால், சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
மாயமான அம்மன் சிலை: சென்னை கிழக்கு தாம்பரம் அடுத்த கஸ்பாபுரம் கிராமத்தில் கோலாச்சியம்மன் கோவிலில் பிரதிஷ்டி செய்வது குறித்து மூன்று மாத காலமாக இரு சமூகத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஒரு சமூகத்தினர் தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்கள் உதவியுடன் கடந்த ஆடி பூரம் அன்று வேப்பமரத்தின் கீழ் மூன்று அடிக்கு கோலாச்சி அம்மன் சிலை வைத்து நான்கு நாட்களாக பிரதிஷ்டை செய்து வழிபாடு நடத்தி வந்துள்ளனர்.
இந்த நிலையில், வழக்கம் போல் அம்மன் சிலைக்கு பூஜை செய்வதற்காக வந்த போது அம்மன் சிலை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனை கேள்வி பட்டு அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கூடினர். மேலும், அம்மன் சிலையை கோவில் அருகில் உள்ள கிணற்றில் வீசியிருப்பதாக சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கபட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சேலையூர் உதவி ஆணையர் கிறிஸ்டி ஜெயசில், ஆய்வாளர் சந்தரு மற்றும் போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.
கல்லூரி மாணவர்களுக்கு ஆயுதம் சப்ளை: சென்னை புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் பேருந்து நிறுத்தத்தில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக மாநில கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 'பஸ் டே' கொண்டாடுவதற்காக வந்த நிலையில் அங்கு ரோந்து பணியில் சென்ற புதுவண்ணாரப்பேட்டை போலீசார் மாணவர்களை பிடித்து சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, 4 மாணவர்கள் கத்தியுடன் இருந்ததால் அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கல்லூரி மாணவர்களுக்கு கத்தியை கொடுத்து உதவியது யார் என இரண்டு மாதங்களாக போலீசார் விசாரணை செய்ததில் மூவர் கத்தியை கொடுத்து உதவியதும், அவர்கள் சென்னை அருகே உள்ள எலாவூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது. மேலும், அதில் இருவர் தற்போது மாநில கல்லூரியில் பயின்று வருவதும் தெரியவந்தது. இதனையடுத்து ஆயுதம் சப்ளை செய்த லோகேஷ் (18), திலீப் (19), ரவிச்சந்திரன் (19) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 16 வயது சிறுமியை திருமணம் செய்து கர்பமாக்கிய நபர் போக்சோவில் கைது..!