தூத்துக்குடி: வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய கற்றாழுத்த தாழ்வு மண்டலமானது தமிழகத்தை நோக்கி நகரும் என்றும் இதன் காரணமாக தென்மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. இதன் காரணமாகத் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் கடந்த இரண்டு தினங்களுக்கு மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால், நீர்நிலைகள் முழுவதும் நிரம்பி ஆங்காங்கே வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவில்பட்டி அருகேயுள்ள சிதம்பராபுரம் கிராமத்தில் கிழக்குத் தெரு பகுதியில் மழை நீர் புகுந்ததால் ஐந்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதமடைந்தது. மேலும், வீட்டிற்குள் வைத்திருந்த ஆவணங்கள் மற்றும் பொருள்கள் வெள்ளத்தில் அடித்துச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
காட்டாற்று வெள்ளத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் சாலையின் அருகே இருந்த மின்சாரக் கம்பமும் உடைந்துள்ளது. உடனடியாக மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்ததால் அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை.
இதையும் படிங்க: கடந்த ஆண்டு பெய்த மழையில் தரைமட்டமான வீடு! “இன்று வரை நிவாரணம் இல்லை” தச்சநல்லூர் பகுதி மக்கள் வேதனை!
அது மட்டுமின்றி அப்பகுதியில் வசித்து வரும் சிவன் மகன் வேலுச்சாமி என்பவர் வளர்த்து வந்த 40-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை தனது வீட்டருகேயுள்ள பட்டியில் அடைத்து வைத்திருந்தார். இதில் 23 செம்பரி ஆடுகளை காட்டாற்று வெள்ளம் அடித்துச் சென்றுள்ளது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சமுதாய நலக்கூடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் சாலை மறியல்:
கோவில்பட்டி அருகே உள்ள இனாம் மணியாச்சி ஊராட்சிக்குட்பட்ட இந்திரா நகர் 3, 4-ஆவது தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறும்போது, "இந்திரா நகர் பகுதியில் சாலை வசதி, மின்விளக்கு வசதி, வடிகால் வசதி உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை.
இதனால் வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளது. மேலும் பாம்பு, பூரான் மற்றும் விஷப்பூச்சிகள் வீடுகளுக்குள் வருவதால் அச்சமான சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, உடனடியாக அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கோவில்பட்டி பார்க் சாலை அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களுடன் காவல்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், விரைந்து அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று அலுவலர்கள் உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.