கோவை: சூலூர் அடுத்த அப்பநாயக்கன்பட்டி பகுதியில் பீகாரைச் சேர்ந்த மகேஷ்குமார் மற்றும் அஞ்சலி ஆகியோர் ஹோட்டல் நடத்தி வருகின்றனர். இவர்கள் பீகாரில் இருந்து உறவினர் மூலம் வந்த குழந்தையினை, திம்மநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்த விஜயன் என்ற விவசாயிக்கு விற்பனை செய்ததாக சைல்டு லைன் அமைப்பினருக்குப் புகார் வந்தது.
இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சைல்டு லைன் அமைப்பினர், கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட போது குழந்தை விற்பனை நடைபெற்று இருப்பது உறுதியானது.
பீகார் தம்பதி: இதனையடுத்து ஹோட்டல் நடத்தி வந்த பீகாரைச் சேர்ந்த மகேஷ் குமார் - அஞ்சலியை கடந்த 3ஆம் தேதி கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது விவசாயி விஜயன் கடந்த 17 ஆண்டுகளாகக் குழந்தைகள் இல்லாமல் இருந்து வந்த நிலையில், தனக்குக் குழந்தைகள் இல்லாததைப் பலரிடமும் சொல்லி வைத்துள்ளார்.
இந்நிலையில், விஜயனிடம் பழகிய அஞ்சலி, மகேஷ் குமார் தம்பதியினர் தங்களிடம் பிறந்து 15 நாட்களே ஆன ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும், அது பீகாரில் இருப்பதால் இரண்டரை லட்சம் பணம் கொடுத்தால் குழந்தையைப் பெற்றுத் தருவதாகக் கூறியுள்ளனர்.
அதற்கு விவசாயி விஜயன் சம்மதம் தெரிவிக்க, அஞ்சலி பீகாரில் உள்ள தனது தாயார் பூனம் தேவிக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து, பீகாரில் இருந்த பூனம் தேவி மற்றும் அவரது இளைய மகள் மேககுமாரி ஆகியோர் கடந்த சில தினங்களுக்கு முன் பீகாரில் பிறந்து 15 நாட்களே ஆன பெண் குழந்தையை சூலூர் கொண்டு வந்து அஞ்சலி, மகேஷ் குமார் தம்பதியிடம் கொடுத்து பணத்தைப் பெற்று இருக்கின்றனர்.
இரண்டரை லட்சம் ரூபாய் விலை பேசப்பட்ட நிலையில், ஒரு லட்சத்து 80 ஆயிரம் பணம் வாங்கி மீதம் 70 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டி உள்ளதும் அதற்குள் குழந்தை விவகாரம் வெளியே தெரிந்து இருவரும் கைதாகி இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து விவசாயி விஜயனும் கடந்த 4ம் தேதி கைது செய்யப்பட்டார். இதே போல வேறு ஒரு பெண் குழந்தையினை கடந்த ஆண்டு ஆந்திராவைச் சேர்ந்த லாரி டிரைவர் ஒருவருக்கும் பீகார் தம்பதி விற்பனை செய்து இருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து இரண்டு குழந்தைகளையும் சைல்டு லைன் அமைப்பின் உதவியுடன் மீட்ட போலீசார், சைல்டு லைன் அமைப்பின் பாதுகாப்பில் இரு குழந்தைகளையும் வைத்துள்ளனர். இந்நிலையில் விசாரணைக்காக அஞ்சலியின் தாய் பூனம் தேவி மற்றும் அவரது இளைய மகள் மேகா குமாரி ஆகியோரை கோவை வரவழைத்தனர்.
அவர்களிடமும் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது, பீகார் பகுதியில் உள்ள ஒரு ஏழை தம்பதியிடம் இருந்து குழந்தையினை வாங்கி வந்து கோவையில், இரண்டரை லட்சம் விலைக்கு விற்பனை செய்திருப்பது உறுதியானது.
இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்த தனிப்படை போலீசார், சூலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
குழந்தை விற்பனை தொடர்பாக பீகாரைச் சேர்ந்த 4 பேர் உட்பட 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வேறு ஏதாவது குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்கவும் கருமத்தம்பட்டி அனைத்து மகளிர் காவல் துறையினர் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: நீட் விலக்கு குறித்து இனி மத்தியில் பேச்சுகள் வரும்! - மா.சுப்ரமணியன் கூறுவது என்ன?