சென்னை: சென்னை புது வண்ணாரப்பேட்டை மணிகண்டன் 3வது தெருவில் வசித்து வருபவர் சரண்ராஜ். இவர் வீட்டின் அருகே காகம் ஒன்று மரத்தில் தன் காலில் காத்தாடி நூல் மற்றும் சணல் கயிறு சிக்கி நீண்ட நேரமாக உயிருக்கு போராடிய நிலையில் தவித்துக்கொண்டிருந்ததை கண்டுள்ளார்.
பின் அவர் தீயணைப்பு துறை கட்டுப்பாட்டறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து தண்டையார் பேட்டை தீயணைப்பு நிலையத்திலிருந்து பாண்டியன் என்பவரது தலைமையில் நான்கு தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்தனர். பின் காகம் சிக்கி இருந்த மரத்திற்கு அருகில் இருக்கும் வீட்டின் மாடியில் ஏறி உயிருக்கு போராடியபடி தொங்கி கொண்டிருந்த காகத்தை கையுறை அணிந்து பத்திரமாக மீட்டனர்.
இதனை அடுத்து காகம் காலில் சிக்கிக் கொண்டிருந்த சணல் கயிறு மற்றும் காத்தாடி நூலை பத்திரமாக கத்திரிக்கோல் மூலம் அகற்றினர். இதில் காகத்திற்கு காலில் லேசான காயம் ஏற்பட்டதை அடுத்து தீயணைப்பு வீரர்கள் தங்களது அலுவலகத்திற்கு கொண்டு சென்று முதலுதவி செய்து, தண்ணீர் வழங்கி பின் அதை பறக்க விட்டனர். மரத்தில் காலில் காயத்துடன் சிக்கி இருந்த காகத்தை தகவல் அளித்த சில நிமிடத்தில் வந்து மீட்டு முதலுதவி அளித்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர்களை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி: ஈரோடு வார சந்தையில் இருமடங்கு விலை உயர்ந்த வாழைத்தார்!