திருவண்ணாமலை: செங்கம் அடுத்த இறையூரில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்துவரும் பெண் வருவாய் ஆய்வாளர் பாரதி என்பவர் வாரிசு சான்றிதழ் தர ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கையும் களவுமாக பிடிபட்டார்.
வேல் நாச்சிபட்டு பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் வாரிசு சான்றிதழ் கேட்டு வருவாய் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் இறையூர் வருவாய் ஆய்வாளர் பாரதி, வாரிசு சான்றிதழ் கொடுக்க பழனிச்சாமியிடம் ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும், தன்னிடம் பணம் இல்லை என கூறியும், பணம் கொடுத்தால் தான் வாரிசு சான்றிதழ் தர முடியும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பழனிச்சாமி, திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் வேல்முருகனிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை ஆலோசனைப்படி, பழனிச்சாமி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்த ரசாயனம் கலந்து ரூபாய் நோட்டுக்களை வருவாய் ஆய்வாளர் பாரதியிடம் வழங்கியுள்ளார். அப்போது வருவாய் ஆய்வாளர் பாரதியை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்து, விசாரணைக்காக செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். வாரிசு சான்றிதழ் வழங்க ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வருவாய் ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் முறைகேடு; 3 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கைது..24 பேர் மீது வழக்குப் பதிவு - Tiruvannamalai PM Awas Yojana scam