சேலம்: அயோத்தியாபட்டணம் அருகில் உள்ளது மாசி நாயக்கன் பட்டி. இங்கு உள்ள இந்திரா நகரை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (54) இவர் நோட்டுப் புத்தகம் ஒட்டும் வேதிப்பொருள் தயாரிக்கும் தொழில் செய்து வந்தார். இவருடைய மனைவி நிர்மலா. இவர்களது மகன் ரிஷிகேசன் (30), பி.இ. இவர் படித்துவிட்டு தந்தையுடன் சேர்ந்து தொழில் செய்து வந்தார். மகள் பூஜா (23) பி.காம் படித்துவிட்டு கோவையில் தங்கி சி.ஏ. படிப்பதற்கான பயிற்சி எடுத்து வந்துள்ளார்.
பூஜா விடுமுறையில் தற்போது சேலத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் உறவினர் ஒருவருக்கு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்துள்ளது. இதை பார்ப்பதற்காக நிர்மலா நேற்று (ஜன.26) காலை வீட்டிலிருந்து சென்றுள்ளார். பின்னர் மாலை வீட்டிற்கு வந்தபோது வீடு திறந்து இருந்துள்ளது.
உள்ளே சென்று நிர்மலா பார்த்த போது படுக்கை அறையில் கழுத்தில் காயத்துடன் மரக் கட்டிலில் மகள் பூஜா இறந்த நிலையிலும், அதன் அருகில் கணவர் வெங்கடேஸ்வரன், மகன் ரிஷிகேசன் இருவரும் தற்கொலை செய்துள்ளனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த நிர்மலா கதறி அழுதுள்ளார். இதனை அடுத்து உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்துள்ளனர்.
இதனை அடுத்து நிர்மலா இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பெயரில் போலீஸ் கமிஷனர் செல்வம், இன்ஸ்பெக்டர் பால்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், "நிர்மலா வீட்டை விட்டு வெளியில் சென்ற பிறகு தந்தை, மகன் மற்றும் மகள் வீட்டிலிருந்து உள்ளனர். இந்த நிலையில் பூஜா கழுத்தில் காயத்துடன் மரக் கட்டிலில் உயிரற்று கிடந்தார். இதனால் முதலில் பூஜாவை கொன்று விட்டு அதன் பிறகு தந்தை, மகன் இரண்டு பேரும் தற்கொலை செய்து இருக்கலாம்" எனத் தெரிவித்தனர்.
மகளைக் கொலை செய்து விட்டு தந்தை, மகன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.