ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள புஞ்சை புளியம்பட்டி நகராட்சி மாட்டுச் சந்தை, தமிழ்நாட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற சந்தை ஆகும். வாரந்தோறும் வியாழக்கிழமை நடைபெறும் இச்சந்தைக்கு, ஈரோடு மாவட்டத்தில் இருந்து மட்டுமின்றி திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பசு, கன்றுகள், உழவு மாடுகள் ஆகிய நூற்றுக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு வருவது வழக்கம்.
அப்படி விற்பனைக்கு வரும் மாடுகளை வாங்க தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் பல வியாபாரிகள் வருவர். தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், வறட்சி காரணமாக மேய்ச்சல் நிலங்களில் தீவனம் இல்லாமல் வறண்டு காணப்படுகிறது. அதன் காரணமாக, கால்நடைகளுக்குத் தண்ணீர் மற்றும் தீவன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆகையால், விவசாயிகள் தாங்கள் வளர்த்து வரும் கன்று மற்றும் கறவை மாடுகளை இன்று நடந்த சந்தைக்கு அதிகமாக விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
வறட்சி காரணமாக கால்நடைகளை வாங்க விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் முன்வராததால், மாடுகளின் விலை குறைந்து விற்பனையானது. அதாவது, கடந்த மாதம் ரூ.30 ஆயிரத்திற்கு விற்பனையான மாடு ரூ.20 ஆயிரத்திற்கும், ரூ.15 ஆயிரத்திற்கு விற்பனையான வளர்ப்பு கன்று இந்த வாரம் ரூ.10 ஆயிரத்துக்கு மட்டுமே விற்பனையானது. கால்நடைகளின் விலை குறைந்ததால் ஒரு சில விவசாயிகள் மாடுகளை விற்காமல் திருப்பிக் கொண்டு சென்றனர். தற்போது, வறட்சி காரணமாக கால்நடைகளின் விலை குறைந்து விற்பனையானதால் விவசாயிகள் கவலை மிகவும் அடைந்துள்ளனர்.