திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்தவர், பா.முருகேஷ். தற்போது அவருக்கு பணி மாற்றம் செய்யப்பட்டு, வேளாண்துறை இயக்குனராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், விவசாயிகளுக்கு எதிராக முருகேஷ் செயல்படுவதாகக் கூறி, விவசாயிகள் இன்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பணி மாற்றத்தை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி, கட்சி சார்பற்ற விவசாய சங்கம் சார்பில் விவசாயிகள் நெற்றியில் நாமம் போட்டுக் கொண்டும், பப்பிள்ஸ் விட்டும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த புருஷோத்தமன் கூறுகையில், “திருவண்ணாமலை மாவட்டத்தில் சமுதாய நீர் உறிஞ்சி குழி, சிறிய தடுப்பணை, பண்ணை குட்டைகள் என கடந்த மூன்று ஆண்டுகளில் சுமார் 450 கோடி செலவில் இரண்டு கோடி கன அடி நீர்மட்டம் தண்ணீர் சேமிக்க அமைக்கப்பட்டது.
குறிப்பாக, மனித உழைப்பில் செய்ய வேண்டிய இந்தப் பணிகள் 20 நாட்களில் ஜேசிபி இயந்திரம் மூலம் முடிக்கப்பட்டுள்ளது. இது 100 நாள் வேலைத் திட்டச் சட்டத்திற்கு புறம்பானது. ஒவ்வொரு கிராமத்திலும் 200 திறந்தவெளி பாசனக் கிணற்றில், மழைக் காலத்தில் சேமிக்காத நீரை 5 அடி ஆழ குட்டை அமைத்து நீர் சேமித்ததால், நிலத்தடி நீர் உயர்ந்ததாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்து வரும் கருத்து வேடிக்கையாக இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இரண்டு லட்சத்து 50 ஆயிரம் விவசாயிகள் கிணற்றுப் பாசனத்தை நம்பி விவசாயம் செய்து வருகின்றனர். ஒவ்வொரு பாசனக் கிணறும் தூர்வார தலா 30 ஆயிரம் விகிதம், ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பாசனக் கிணற்றுக்கு ரூபாய் 450 கோடி வழங்கியிருந்தால், 7 கோடி கன அடி நீர் சேமித்து இருக்கலாம்.
100 நாள் வேலை உறுதிச் சட்டம், மனித உழைப்பில் செய்ய வேண்டிய பணிகள் அனைத்தும் ஜேசிபி மூலம் செய்துவிட்டு, மாவட்ட நிர்வாகம் செய்ததாக தெரிவிக்கும் சம்பவம் மிகவும் பொய்யானது. கடந்த மூன்று ஆண்டுகளில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக இருந்த பா.முருகேஷ், 32 விவசாய குறைதீர்வு கூட்டத்தில் முழுமையாக கலந்து கொள்ளவில்லை. தற்போது அவருக்கு வேளாண்துறை இயக்குனராக பதவி அளித்திருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் விவசாயிகளுக்கு எதிராக செயல்படுகிறார்” என தெரிவித்தார்.
இந்நிலையில், அவருக்கு அளித்த வேளாண் துறை இயக்குனர் பதவியை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தி, விவசாயிகள் நெற்றியில் நாமம் போட்டுக்கொண்டும், பப்பிள்ஸ் விட்டும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: 'தமிழக வெற்றி கழகம்' என்ற பெயரில் களமிறங்கிய விஜய்.. கொள்கை, திட்டம் என்ன?