கோயம்புத்தூர்: ஓர் ஆண்டிற்கும் மேலாகப் போலி மருத்துவர் ஒருவர் ஜோதி கிளினிக் என்ற பெயரில் பொதுமக்களுக்குச் சிகிச்சை அளித்து வந்துள்ள சம்பவம் கோவை மாவட்ட பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை சிங்காநல்லூர் நீலிகோணம் பாளையம் பகுதியில் ஜோதி கிளினிக் என்ற பெயரில் போலி மருத்துவர் ஒருவர் மருத்துவம் பார்த்து வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலின் அடிப்படையில் மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறை இணை இயக்குநர் ராஜசேகரன் தலைமையிலான குழுவினர் அங்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின் போது கிளினிக்கில் மருத்துவம் பார்த்துக்கொண்டிருந்த போலி மருத்துவரான தேவராஜ் என்பவரிடம் இணை இயக்குநரின் ஓட்டுநரை நோயாளி போல் சிகிச்சைக்கு அனுப்பி வைத்து விட்டு அதிகாரிகள் அவரை பின்தொடர்ந்தனர்.
தேவராஜ் அவருக்கு பல்ஸ், டெம்பரேச்சர் போன்றவை பார்த்து ஊசி போட இருந்த நிலையில், இணை இயக்குநர் ராஜசேகரன் தலைமையிலான குழுவினர் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர், அவரது ஆவணங்களைச் சரி பார்த்த போது, அவர் 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர் என்பதும், முன்னதாக மருந்துக் கடையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், அந்த அனுபவத்தை வைத்துக் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக நீலிகோணம் பாளையம் பகுதியில் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வந்துள்ளார். இதனையடுத்து, அந்த கிளினிக்கில் ஆய்வு செய்த அதிகாரிகள், பயன்படுத்தப்பட்ட மருத்துவ குப்பிகள் மற்றும் மருந்து வகைகளைக் கைப்பற்றினர்.
பின்னர், இது குறித்து சிங்காநல்லூர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, போலி மருத்துவர் தேவராஜ் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரை கைது செய்த சிங்காநல்லூர் போலிசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் நடத்தி வந்த கிளினிக்கிற்கு சுகாதாரத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். ஒரு ஆண்டுக்கும் மேலாகப் போலி மருத்துவர் பொதுமக்களுக்குச் சிகிச்சை அளித்து வந்த நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பணிப்பெண் தாக்கப்பட்ட விவகாரம்; தீவிரமடையும் விசாரணை.. விரைவில் கைது நடவடிக்கை?