ஈரோடு: ஈரோடு அருகே 46புதூர் ஊராட்சி பகுதிக்கு உட்பட்ட குதிரைப்பாளி பகுதியை சேர்ந்த பெருமாள் - வீரம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு 4பெண்கள்,2மகன்கள் உள்ளனர். இந்நிலையில் 100வயதைக் கடந்த வயதான தாத்தா பாட்டி இருவருக்கும் 'கனக அபிஷேக விழா' நடத்த வேண்டும் என குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளனர்.
இதனை தொடர்து இன்று(திங்கள்கிழமை) ஊரில் உள்ள மாரியம்மன் கோவிலில் யாகம் செய்து 100வது திருமணத்தை கோலாகலமாக நடத்தினர். முதலில் கோயிலுக்கு வந்த தம்பதிக்கு மாலை மாற்றப்பட்டு சடங்குகள் செய்யப்பட்டு, பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைத்து பட்டு உடைகள் அணிவிக்கப்பட்டு அழைத்து வந்தனர்.
தொடர்ந்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் ஆயுள் விருத்தி ஹோமம் நடைபெற்று தனது குடும்பத்தினர் முன்னிலையில் மஞ்சள் கிழங்கு கோர்க்கப்பட்ட மஞ்சள் கயிற்றாலான தாலியை 110 வயதான பெருமாள் தனது மனைவி வீரம்மாளுக்கு கட்டினார். அப்போது உறவினர்கள் அனைவரும் மஞ்சளரிசி, பூக்களைத் தூவி வாழ்த்தினர்.
தொடர்ந்து மூத்த தம்பதியினரிடம் அனைவரும் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுச்சென்றனர். பின்னர் ஒட்டு மொத்த குடும்பமும் ஒன்றாக இணைந்து குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். கணவன் மனைவியாக வாழக்கூடியவர்கள் ஆயிரம் பௌர்ணமியைப் பார்த்தால் தான் கனக அபிஷேகம் செய்ய வேண்டும் என்ற ஐதீகம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: “தமிழ்த்தாய் வாழ்த்து சரியா பாடுனா பெட்ரோல் இலவசம்” - தஞ்சையில் தமிழ் வளர்க்கும் தொண்டு நிறுவனம்!
இது குறித்து மகன்கள் கூறும்போது, "எங்களை விவசாய வேலை என சிறு வேலைகளை செய்து வளர்த்து வந்த தாய் தந்தைக்கு திருமணம் செய்து பார்ப்பது என்பது அளவற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. இன்று வரை இருவரும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருக்கின்றனர்.
மேலும் சிறு வேலைகளுக்கு செல்வதற்குக் கூட சைக்கிளில் செல்வதை வாடிக்கையாக தந்தை பெருமாள் வைத்திருப்பதாக கூறுகின்றனர். மகள்கள் கூறும்போது,"தாங்கள் பேத்தி எடுத்தும் கூட தங்களது தாய் தந்தைக்கு சர்க்கரை,இரத்த அழுத்தம்,போன்ற எந்த பிரச்சனையும் இல்லாமல் ஆரோக்கியத்துடன் இருப்பது மகிழ்ச்சியாகவுள்ளது.
இன்று வரை யாரையும் சார்ந்து இருக்காமல் அவர்களாகவே சமைத்து சாப்பிட்டு வருகிறார்கள். இதுபோன்ற திருமணத்தை தங்களது குடும்பத்தில் உள்ள வயதான தம்பதியினருக்கு நிகழ்த்தி அவர்களை மகிழ்ச்சியடை வேண்டும் என குடும்பத்தினர் அனைவரும் நினைத்தோம். இந்த விழாவில் எங்கள் குடும்பத்தில் அனைவரும் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என தெரிவித்தனர்.