ஈரோடு: ஈரோடு மாவட்டம், பவானி அருகே உள்ள சித்தோடு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சி.எம் நகர் பகுதியில், தீபாவளி தினமான நேற்று இரவு, சித்தோடு காவல் ஆய்வாளர் ரவி மற்றும் காவல் உதவி ஆய்வாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, சி.எம் நகர் பகுதியில் குடிபோதையில் சில இளைஞர்கள் சண்டை போட்டுக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்தது. உடனடியாக, காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர். அப்போது, குடிபோதையில் இருந்த இரண்டு இளைஞர்கள், உதவி காவல் ஆய்வாளர் பன்னீர்செல்வத்திடம் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது.
ஒரு கட்டத்தில் இரண்டு இளைஞர்களும் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளரைத் தாக்கியுள்ளனர். தொடர்ந்து, தகவல் அறிந்த மற்ற போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, இரண்டு இளைஞர்களையும் பிடித்து பவானி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
இதையும் படிங்க: பட்டாசு வெடிப்பதில் வெடித்த இருதரப்பு மோதல்.. விசாரணையில் போலீசார்!
மேலும், தாக்குதலில் லேசான காயமடைந்த காவல் ஆய்வாளரும், காவல் உதவி ஆய்வாளரும் சக போலீசாரால் மீட்கப்பட்டு, பவானி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, குடிபோதையில் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் மீது தாக்குதல் நடத்திய இளைஞர்கள் குறித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் சித்தோடு சி.எம் நகர் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் (32) மற்றும் கோபால் (28) என்பது தெரிய வந்தது. இதனை அடுத்து, போலீசார் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்ததோடு, கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
![ஈடிவி பாரத் தமிழ்நாடு](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/01-11-2024/22808266_a.jpg)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.