ஈரோடு : ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்டது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. இதனையடுத்து நேற்று மாலை கோயம்பத்தூர் மாவட்டம் பில்லூர் அணையில் இருக்கும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் இருந்து 3000 கன அடி தண்ணீர் பவானிசாகர் அணைக்கு திறக்கப்பட்டது. இதனால் பவானிசாகர் அணையின் நீர்வரத்து 1316 கன அடியில் இருந்து 6,357 கன அடியாக அதிகரித்துள்ளது.
பவானிசாகர் அணை: பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த சில மாதங்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதி மற்றும் வட கேரளா பகுதிகளில் மழை பெய்யாத காரணத்தால் அணையின் நீர் வரத்து ஏற்கனவே சரிந்து இருந்தது.
இதனிடையே பாசனத்திற்காக நீர் திறக்கபட்டதை தொடர்ந்து அணையின் நீர்மட்டம் 44 அடியாக குறைந்திருந்தது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 47.23 அடியாகவும், நீர் இருப்பு 3.8 டிஎம்சி ஆகவும் உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்று பகுதிகளுக்கு குடிநீர் தேவைக்காக 205 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து 5 கன அடி அளவிலான நீர் மட்டம் குறைந்து 44 அடியாக உள்ளது. இதனால் பாசனப்பகுதிகளில் இருக்கும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: சிலந்தி ஆற்று தடுப்பணை; மாநில உரிமையை பறிகொடுக்கும் செயல்