கோயம்புத்தூர்: கோவை மாவட்டம், பூண்டி வெள்ளியங்கிரி மலைப்பகுதி மற்றும் நரசிபுரம் வைதேகி நீர்வீழ்ச்சி பகுதிகளில் தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த யானைகள் இரவு நேரங்களில் விவசாய நிலங்களில் புகுந்து வருவதால், அதனைத் தடுக்க வேட்டைத் தடுப்பு காவலர்களும் வன பணியாளர்களும் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், பூண்டி வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு நாள்தோறும் அன்னதானம் வழங்க நன்கொடையாக வழங்கப்பட்ட அரிசிகளை தனியாக ஒரு அறையில் வைத்து பராமரித்து வருகின்றனர். நேற்று முள்ளாங்காடு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பின்புறம் அன்னதானத்திற்காக அரிசி மூட்டைகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் புகுந்தது.
இதனைப் பார்த்த ஊழியர்கள், உடனடியாக போளுவாம்பட்டி வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த வனத்துறையினர், சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக போராடி யானையை வெளியே கொண்டு வந்தனர். பின்னர், பட்டாசு வெடித்து அருகில் உள்ள வனப்பகுதிக்குள் யானையை விரட்டினர்.
மேலும், இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் நாள்தோறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. அதற்கு நன்கொடையாக வரும் அரிசி மூட்டைகளை கோயில் பின்புறம் உள்ள அறையில் இருப்பு வைத்திருப்பது வழக்கம். இந்நிலையில், உணவு தேடி வந்த ஒற்றை யானை பூட்டியிருந்த அறையின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளது" என்றார்.
மேலும், அங்கிருந்த 50 கிலோ அளவிலான அரிசிகளை யானை சாப்பிட்ட நிலையில், வனத்துறையினர் அதனை வெளியேற்றி வனத்திற்குள் அனுப்பி வைத்தனர். மேலும், அந்தப் பகுதியில் அரிசி மூட்டைகள் இருப்பு வைக்க வேண்டாம் என கோயில் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுபோல, வனத்தை ஒட்டியுள்ள தோட்டத்து சாலைகளில் யானைகளைக் கவரும் வகையில் ரேஷன் அரிசிகளில் இருப்பு வைக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இதேபோன்று, நேற்று இரவு மருதமலை அடிவாரம் ஐஓபி காலனி பகுதிக்குள் தாய் மற்றும் குட்டி யானை புகுந்த நிலையில், அப்பகுதியில் உள்ள மூன்றுக்கும் மேற்பட்ட வீடுகளின் சுற்றுச்சுவரை இடித்ததோடு, தனியார் அடுக்குமாடி குடியிருப்புக்குச் செல்லும் வழியில் வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் ட்ரம்மில் இருந்த குப்பைகளை வெளியே எடுத்து வீசிச் சென்றது. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: பள்ளி - கார் ஷெட் - குடியிருப்பு.. திருப்பத்தூரை பரபரப்பாக்கிய சிறுத்தை பிடிபட்டது!