விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ராக்காச்சி அம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் கோபால மூர்த்தி என்பவருக்குச் சொந்தமான விவசாய தென்னந்தோப்பு உள்ளது.
இந்த தோப்புக்குள் வன விலங்குகள் வந்து பயிர்களை சேதப்படுத்துவதை தவிர்க்க, உயரழுத்த மின் கம்பியிலிருந்து சட்ட விரோதமாக சிறிய அளவிலான கம்பி மூலம் மின்வேலி அமைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிகிறது. இந்நிலையில், வனப்பகுதிக்குள் இருந்து உணவு தேடி வந்த சுமார் ஆறு வயது மதிக்கத்தக்க ஆண் யானை தோப்புக்குள் இருந்த தென்னங்கன்றை தின்றுள்ளது. அப்போது, எதிர்பாராத விதமாக மின்வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் தலைமையிலான வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அப்பகுதியில் மழை பெய்து வருவதால் அடுத்த கட்ட பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
மேலும், கால்நடை மருத்துவர்கள் இறந்த யானையை உடற்கூறு ஆய்வு செய்த பின்னரே மற்ற தகவல்கள் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக கோபால மூர்த்தியைப் பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : எப்பா சாப்பாடு எதுவும் இருக்கா! வீட்டு கேட்டை உடைத்து காட்டு யானை அட்டகாசம்! - Elephnat Attrocity video