ஈரோடு: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை மிக மும்மரமாக மாவட்ட தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
அந்த வகையில், ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள 1688 வாக்குச்சாவடி மையங்களுக்கும் இன்று மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடி மையங்களுக்குப் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லும் பணியினை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ராஜகோபால் சுன்காரா முன்னிலையில் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து, செய்தியாளர்களிடம் மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா பேசுகையில், “ஈரோடு மாவட்டத்தில் மூன்றாம் கட்ட தேர்தல் பயிற்சி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையில் வாக்குச்சாவடிக்கு வாக்குப்பதிவு இயந்திரம் கொண்டு செல்லும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டத்தில் 10ஆயிரத்து 970 வாக்குப்பதிவு பணியாளர்களுக்குப் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.
நாளை அதிகாலை 5:30 மணி முதல் மாதிரியான வாக்குப்பதிவுடன் வாக்குபதிவு தொடங்க உள்ளது. வாக்குப்பதிவு குறித்து 2 மணி நேரத்திற்கு ஒரு முறை வாக்குப்பதிவு சதவீதம் குறித்து தகவல்கள் தெரிவிக்கப்படும். ஈரோடு மாவட்டத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 5.61கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டதில் 3.45கோடி ரூபாய் திருப்பிக் கொடுக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆயிரத்து 400 வாக்குச்சாவடிகள் வெப்கேமரா மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் துணை ராணுவப் படை வீரர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள். நேற்று காலை ஈரோடு கிழக்கு தொகுதிக்கு உள்ள கருங்கல்பாளையம்,வடக்கு காவல்நிலையத்தில் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை தாராபுரம் காவல்நிலையத்தில் பணம் பறிமுதல் செய்தது குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கத்திரி மலைக்குத் தேர்தல் போது கடந்த முறை கழுதை வைத்து வாக்குப்பதிவு இயந்திரம் எடுத்துச் சென்ற நிலையில், தற்போது வாகனம் போகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் வாக்குப்பதிவு இயந்திரம் உட்படப் பணியாளர்கள் டிராக்டர் மூலம் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
அதேபோல, நீலகிரி மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட 16 பேர் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்காக பவானிசாகர் தொகுதி 29 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு 295 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தாளவாடி கடம்பூர் மற்றும் கேர்மாளண் மலைக்கிராமங்களில் என 127 இடங்களில் வெப் கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று அனைத்து வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணியில் நடந்து வருகிறது.
போலீஸ் பாதுகாப்புடன் லாரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கண்ட்ரோல் யூனிட் மற்றும் விவிபேட் எந்திரங்கள் பழுது ஏற்பாட்டால் மாற்று இயந்திரங்கள் மற்றும் வாக்குப் பதிவிற்குத் தேவையான வாக்காளர் பதிவு படிவம், பேலட் பேப்பர், அழியாத மை, ரப்பர் ஸ்டாம்ப் உள்ளிட்ட எழுது பொருட்கள், பசை உள்ளிட்ட 36 வகையான பொருட்கள் அனுப்பப்பட்டன.
தற்போது, சத்தியமங்கலம் நகராட்சியில் 1 மாதிரி வாக்குச்சாவடி உட்பட 32 வாக்குச்சாவடிகளில் தேர்தல் பணியாளர்கள் வந்துள்ளனர். அந்தந்த வாக்குச்சாவடிகளில் அனுப்பப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம், கண்ரோல் யூனிட் மற்றும் விவிபேட் மற்றும் தேர்தல் உபகரணங்கள் சரிப்பார்க்கும் பணி நடைபெற்றது வருகிறது. மேலும் வாக்காளர்கள் வரிசையாக வாக்களிக்கும் வகையில் டேபிள்,மேஜை அமைக்கப்பட்டு வருகிறது. மேலும், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படைகள் வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த பணிகளை சத்தியமங்கலம் நகராட்சி ஆணையாளர் செல்வம் நேரில் பார்வையிட்டு அறிவுரை வழங்கினார். சத்தியமங்கலம் நகராட்சிப்பள்ளியில் வாக்காளர்களைக் கவரும் வகையில் பலவண்ணத் துணிகளால் தோரணங்கள் அமைக்கப்பட்டு மாதிரி வாக்குச்சாவடியில் 741 பேர் வாக்களிக்கின்றனர்.