சென்னை: நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அதற்காக, அரசுப் பள்ளிகள், அங்கன்வாடிகள் உள்ளிட்டவை வாக்குச்சாவடிகளாகப் பயன்படுத்தப்பட்டன.
தற்போது வாக்குப்பதிவு நாள் முடிந்து ஒரு வாரம் கடந்தும் சென்னையில் உள்ள அரசுப் பள்ளியில் தேர்தலுக்குப் பிறகு சுத்தம் செய்யவில்லை என்ற புகார் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, சென்னை முகப்பேர் அரசு ஆரம்பப் பள்ளியைச் சேர்ந்த பள்ளி சிறுமி ஒருவர், “பள்ளியில் கழிவுகளைக் கொட்டி சென்றுவிட்டீர்கள் இது சரியா? ஒட்டிய அறிவிப்பு போஸ்டர்களையும் அகற்றவில்லையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து யுகேஜி மாணவி பேசிய வீடியோவில், "எங்களது பள்ளி அறையை என்ன பண்ணி வச்சிருக்கீங்க? அரசு அதிகாரிகள் என்று சொல்றாங்க. ஆனால், சாப்பிட்ட உணவு குப்பைகளைக் கூட அகற்றாமல் பள்ளி வளாகத்திலேயே இப்படி அசுத்தமாக விட்டுச் சென்றுள்ளார்கள்.
எங்கள் பள்ளியை நாங்களே தூய்மையாக வைத்துக் கொள்கிறோம். வெளியில் இருந்து வருபவர்களும் அதே போன்று செய்ய வேண்டும் என்று தெரியாதா?" என்று மழலை மொழியில் அரசு அதிகாரிகளுக்கு டோஸ் விட்டுள்ள இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
அதனைத் தொடர்ந்து, பள்ளி வகுப்பறைச் சுவர்கள் மற்றும் உடைந்து கிடந்த அலமாரிகள், குப்பைகள் என அனைத்தையும் மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்து சரி செய்தனர். இந்த நிலையில் பள்ளி நிர்வாகம், பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் கவுன்சிலர் ஆகியோர் தங்களை மிரட்டுவதாக செய்திகள் வெளியான நிலையில், இது குறித்து விளக்கமளித்த சிறுமியின் தாய் ரம்யா, "தேர்தல் பணியின் போது பள்ளி வகுப்பறைகள் அசுத்தமாக இருப்பது குறித்த வெளியிட்ட வீடியோவால் அனைத்து பள்ளிகளிலும் துரிதமாக நடவடிக்கை எடுப்பட்டதற்கு நன்றிகள்.
தான் எந்த ஒரு புகழுக்காகவும், பிரபலப்படுத்தவோ இந்த வீடியோவை எடுக்கவில்லை. தற்போது இந்த வீடியோவால் தான் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் விரைந்து முடிக்கப்பட்டுள்ளது. என் குழந்தை ஏற்கனவே தேர்தல் விழிப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியவர். ஆகையால், என் குழந்தைக்கு கற்றுக் கொடுத்து, பேச சொல்ல வேண்டிய அவசியம் இல்லை, தவறைப் பார்த்தால் தனக்கு தோன்றியதைப் பேசினார்.
பிரபலப்படுத்திக் கொள்ள ஆயிரம் வழிகள் உள்ளது. தனியார் பள்ளியில் படித்த தனது மகள் மற்றும் மகனை அரசுப் பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கின்றோம். தங்களது பள்ளியில் குறைகளை தாங்கள் தான் எடுத்துரைக்க வேண்டும். பள்ளி மேலாண்மைக் குழு பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், பள்ளியின் நிலையை எடுத்துரைக்க உரிமை உள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “வீடியோ வைரலான விவகாரத்தில் வீடியோவின் நோக்கத்தைச் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். தவறாகப் புரிந்து அரசுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறுவது வேதனை அளிக்கிறது. பள்ளியின் நலன் கருதி செய்த விஷயத்தை தவறாக சித்தரிக்க வேண்டாம்.
மேலும், இந்த விவகாரத்தில் சென்னை உதவி கல்வி இயக்குனர் கல்பனா, மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மனம் நோகும் வகையில் பேசுவதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தை இத்துடன் முடித்துக் கொள்ளலாம், இந்த வீடியோவிற்கான நோக்கம் நிறைவேறிவிட்டது. ஆகையால், அதைப் புரிந்து கொண்டு இது தொடர்பாக இனி எதுவும் பேச வேண்டாம்" என கோரிக்கை விடுத்தார்.
அதனைத் தொடர்ந்து பேசிய சிறுமி அஹிம்சா, "தான் வெளியிட்ட வீடியோவால் துரிதமாக சீரமைப்புப் பணிகள் மேற்கொண்டு செய்து முடித்ததற்கு நன்றி" என தனது மழலைக் குரலில் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தின் எதிரொலியாக பள்ளி நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் பெற்றோர் பள்ளி வளாகத்திற்குள் வர அனுமதி இல்லை என திடீர் கூட்டம் கூட்டி, பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் கவனத்திற்கு கொண்டு வராமல் அவசரக் கூட்டம் கூட்டி தீர்மானம் போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.