சென்னை: பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியலை இன்று தமிழ்நாடு மாணவர் சேர்க்கைக் குழுவின் தலைவரும், தொழில்நுட்பக் கல்வி கழகத்தின் ஆணையருமான வீரராகவராவ் வெளியிட்டார். அதில், 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 பேர் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அவர்களில் பொதுப்பிரிவில் 1 லட்சத்து 97 ஆயிரத்து 601 பேரும், தொழிற்கல்விப் பிரிவில் 2 ஆயிரத்து 267 பேரும் இடம் பெற்றுள்ளனர்.
விளையாட்டு வீரர்களுக்கான 500 இடங்களுக்கு விண்ணப்பம் செய்தவர்களில் 2,112 பேருக்கும், மாற்றுத்திறானாளிகள் பிரிவில் 408 பேரும், முன்னாள் ராணுவத்தினர் பிரிவில் 1223 பேரும் இடம் பெற்றுள்ளனர். மாணவர்கள் 1 லட்சத்து 12 ஆயிரத்து 731 பேரும், மாணவிகள் 87 ஆயிரத்து 134 பேரும், மூன்றாம் பாலினித்தவர் 3 பேர் என ஒரு லட்சத்து 99 ஆயிரத்து 868 பேர் இடம் பெற்றுள்ளனர்.
தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த 1 லட்சத்து 73 ஆயிரத்து 729 பேரும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த 24 ஆயிரத்து 661 பேரும், ஐசிஎஸ்இ பாடத்தில் படித்த 943 பேரும், பிற பாடத்திட்டத்தில் படித்த 535 பேரும் இடம் பெற்றுள்ளனர். 2023-24ம் கல்வியாண்டில் படித்த மாணவர்கள் 1 லட்சத்து 86 ஆயிரத்து 553 பேரும், 2024ம் ஆண்டிற்கு முன்னர் படித்தவர்கள் 13 ஆயிரத்து 315 பேரும் இடம் பெற்றுள்ளனர். தமிழ் வழியில் படித்த 58 ஆயிரத்து 744 மாணவர்களும், ஆங்கில வழியில் படித்த 1 லட்சத்து 41 ஆயிரத்து 77 மாணவர்களும், பிற மொழியில் படித்த 47 மாணவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
இலங்கைத் தமிழர்கள்: பொறியியல் படிப்பில் சேர்வதற்கு தமிழ்நாட்டிலிருந்து 1 லட்சத்து 99 ஆயிரத்து 245 பேரும், பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் 623 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர். மேலும் இலங்கைத் தமிழர்கள் 53 பேரும், பிற நாடுகளைச் சேர்ந்த 68 பேரும் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் கல்வி ஆலோசகர் அஸ்வின் கூறும்போது, முன்னணி பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான கட்-ஆப் இந்த ஆண்டு குறைகிறது.
200 முதல் 195 வரை கட் ஆப் மதிப்பெண் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் குறைந்தும் , 194 முதல் 106 கட் ஆப் வரை 22 மதிப்பெண்கள் வரை கட் ஆப் மதிப்பெண் உயர்ந்துள்ளது. 65 மாணவர்கள் இந்த ஆண்டு 200 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 209 மாணவர்கள் 199 கட் ஆப் மதிப்பெண்களும், 386 மாணவர்கள் 198 கட் ஆப் மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
கடந்தாண்டை ஒப்பிடுகையில் 200 முதல் 195 கட் ஆப் மதிப்பெண்கள் வரை இந்த ஆண்டு கட் ஆப் குறைகின்றது. இதே கட் ஆப் மதிப்பெண்கள் கடந்தாண்டு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் கட் ஆப் மதிப்பெண்கள் அதிகரித்துள்ளது. இதனால் மாணவர்கள் கடந்தாண்டு பெற்ற கட் ஆப் மதிப்பெண்களை விடக் கூடுதலாக பெற்றால் இடம் கிடைக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது" என கூறியுள்ளார்.
இதையும் படிங்க: FMGE தேர்வுக்கு தடை கோரி வழக்கு; மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவு!