தருமபுரி: தருமபுரி மாவட்டம் அரூரில் கொங்கு பல்நோக்கு பயிற்சியகம், கொங்கு இளைஞர்களுக்கு அர்ப்பணிக்கும் பெருவிழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட டிராக்டர்களில், உழவு கருவிகளுடன் நடைபெறும் பேரணியைத் தொடங்கி வைத்து டிரக்டரை ஓட்டி சென்றார். அவருக்கு ஏராளமான பொதுமக்கள் மற்றும் அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து கொங்கு பல்நோக்கு பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து விழா மேடையில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது, என்னை கீழ்த்தரமாக விமர்சனம் செய்தார்கள். ஆனால் ஆட்சி பொறுப்பேற்று நான்கு வருடம் இரண்டு மாதம் நல்லாட்சி கொடுத்தோம். அப்போது தமிழ்நாட்டு மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களைக் கொண்டு வந்தோம்.
அதிலும் குறிப்பாக ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைத்தோம். தருமபுரியில் உள்ள மாணவர்கள் சட்டம் பயில வேண்டும் என்பதற்காகச் சட்டக் கல்லூரி, அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவம் பயில 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு திட்டம் உள்ளிட்டவற்றைக் கொண்டும் வந்தது அதிமுக.
திமுக ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொன்னார்கள். ஆனால் ஆட்சி பொறுப்பேற்று 2 வருடங்கள் 8 மாதங்களாகியும் இன்னும் இதற்கு விடிவு பிறக்கவில்லை. அண்மையில் சேலத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாட்டில் நீட் தேர்வு ரத்து செய்வதற்காக பலதரப்பட்ட மக்களிடம் வாங்கிய கையெழுத்துகளைக் குப்பையில் போட்டார்கள், இது தான் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம்.
கடந்த ஆட்சியில் ஊர் ஊராகச் சென்று மக்களைச் சந்தித்து, புகார் மனுக்களைப் பெற்றார் இன்றைய முதல்வர் ஸ்டாலின், ஆனால் பெட்டியின் சாவி எங்கு வைத்தார் என்று தெரியவில்லை. தமிழ்நாட்டில் உள்ள 40 ஆயிரம் ஏரிகள் பொதுப்பணித்துறை மற்றும் உள்ளாட்சித்துறையின் கீழ் வருகிறது.
இந்த ஏரிகள் பல ஆண்டுகளாகத் தூர்வாரப்படாத காரணத்தால் மழை நீர் உபரி நீராக வெளியேறுகிறது. இதை கவனத்தில் தமிழ்நாட்டில் உள்ள ஏரிகள் தூர்வாரப்படும் என்று அறிவிக்கப்பட்டது மட்டும் அல்லாமல் ஏரிகளில் பெறப்படும் வண்டல் மண் விவசாயிகளுக்கு இயற்கை உரமாகப் பயன்படுத்தினார்கள் இதுதான் அதிமுகவின் சாதனை.
தருமபுரி விவசாயிகள் பயன் பெறும் வகையில் அரூர் குமரன் அணைக்கட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு பூமி பூஜை போடப்பட்டது, ஆனால் இந்த விடியா திமுக அரசு அதனைக் கிடைப்பில் போட்டுவிட்டனர்" என்று எடப்பாடி பழனிசாமி பேசினார்.
இதையும் படிங்க: அதிமுக யார் யார் உடன் கூட்டணி வைக்கும்: பொள்ளாச்சி ஜெயராமன் கூறிய நிபந்தனை!