சேலம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் உள்ள அக்கட்சியின் புறநகர் மாவட்ட அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், 2024 நாடாளுமன்ற தேர்தல் குறித்து பல்வேறு விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
பிரச்சாரத்தை பொறுத்த வரை பாஜக வேட்பாளர்களுக்காக பிரதமர் 8 முறை தமிழகம் வந்தார். தேசிய தலைவர் நட்டா, அமித்ஷா உள்ளிட்டோர் சுற்றுபயணம் செய்து பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்கள் என்றார்.
மேலும், பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பரப்புரை செய்தனர். திமுக தலைவர் ஸ்டாலினும் 90 சதவீதம் பகுதிகளுக்கு சென்று பரப்புரை செய்தார். ராகுல்காந்தி நடைபயணம் செய்தார். திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் திருமாவளவன், வைகோ, முத்தரசன் உள்ளிட்டோர் வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.
மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள், மாநிலத்தில் ஆட்சியில் இருப்பவர்கள், அமைச்சர்கள் ஆங்காங்கே முகாமிட்டு பண பலத்தை பயன்படுத்தி வாக்காளர்களை சந்தித்தனர். அதிமுகவில் நான் ஒருவன் மற்றும் தேமுதிக சார்பில் பிரேமலதா ஆகியோர் மட்டுமே பரப்புரை செய்தோம்.
இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையில் அதிமுக தேர்தலை சந்தித்து கூடுதல் வாக்கு சதவிகிதம் பெற்றுள்ளது. கடந்த தேர்தலை விட கூடுதல் வாக்கு சதவிகிதம் பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. பாஜக 2019 தேர்தலில் பல கட்சி கூட்டணிகளோடு பெற்ற வாக்கு சதவிகித்தை விட குறைவாகவே பெற்றுள்ளது. 2019 தேர்தலில் திமுக வேட்பாளர்கள் 33.52% வாக்குகள் பெற்றனர். தற்போது 26.93% ஆக குறைந்துள்ளது.
திமுக கூட்டணியின் வாக்குகளும் 6.32% குறைந்துள்ளது. இவற்றையெல்லாம் ஒப்பிட்டு பார்க்கும் போது அதிமுகதான் கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது. சட்டமன்ற தேர்தல் வேறு, நாடாளுமன்ற தேர்தல் வேறு.. தேர்தலில் வெற்றி, தோல்வி என்பதெல்லாம் பின்னடைவாக எடுத்துக் கொள்ள முடியாது.
சசிகலா, ஓபிஎஸ் ஒருங்கிணைப்புக்கு விடுக்கும் அழைப்பு முடிந்து போன விஷயம். எதிரிகளோடு சேர்ந்து குழப்பத்தை ஏற்படுத்த பார்க்கின்றனர். 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி தனிப்பெரும்பான்மையோடு ஆட்சி அமைக்கும். கோவையில் அண்ணாமலை கடந்த தேர்தலைவிட குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளார்.
தமிழ்நாட்டில் இருப்பது போல பிற மாநிலங்களிலும் பாஜகவுக்கு மாநில நிர்வாகிகள் இருப்பார்கள் என நினைக்கிறேன். அதனால்தான் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.
2024 மக்களவைத் தேர்தலில் அதிமுகவின் நிலை: கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் மட்டும் அதிமுக வென்ற நிலையில், நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட அதிமுக வெற்றி பெறவில்லை. குறிப்பாக, 12 மக்களவைத் தொகுதிகளில் மூன்றாவது இடத்திற்கு அதிமுக கூட்டணி தள்ளப்பட்டுள்ளது. அதேநேரம், ஏழு தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது.
மேலும், அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட கோவை தொகுதியில் அதிமுக மூன்றாவது இடத்தில் உள்ளது. அத்தொகுதியில், பாஜக வேட்பாளராக அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிட்டு தோல்வி அடைந்தார். மேலும், மதுரை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தென் சென்னை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி மற்றும் வேலூர் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் பாஜக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
இதையும் படிங்க: இலையும் தண்ணீரும் எப்போதும் ஒட்டாது” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி!