சேலம்: கோவை மாநகர், மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எம்எல்ஏவுமான அம்மன் அர்ச்சுனன் கோவையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அதில் நான் அதிமுகவில் ராஜாவாக உள்ளேன். பாஜகவுக்குச் சென்று கூஜாவாக விரும்பவில்லை. நேற்று கோவை அவினாசி சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் அதிமுக எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைய உள்ளதாகத் தகவல் பரவியது.
அதிமுகவில் உள்ள எந்தவொரு அடிப்படை தொண்டனும் பாஜகவில் இணைய மாட்டான். நாங்களும் சொல்வோம் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு 2 பாஜக எம்எல்ஏக்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைவார்கள். இது சிரிப்புக்காகக் கூறவில்லை உண்மை தான். அது கொங்கு மண்டலமாகவும் இருக்கலாம், தென் மண்டலமாகவும் இருக்கலாம் எனத் தெரிவித்தார்.
மேலும் பாஜக சட்டமன்ற உறுப்பினரை நாங்கள் உழைத்து உருவாக்கியுள்ளோம். 'தில்' இருந்தால் இந்த 40 நாடாளுமன்றத் தொகுதியில் ஒரு சீட்டை அவர்கள் வெற்றி பெற்றுக் காண்பிக்கட்டும். இங்கிருந்து யாரும் வெளியில் செல்ல மாட்டார்கள். அவ்வாறு செல்லும் யாரும் உண்மையான அதிமுக கட்சியினராக இருக்க மாட்டார்கள். எனத் தெரிவித்தார்.
இது தொடர்பாக சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பிய போது" அப்படியா? நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது. யார் உங்களுக்குச் சொன்னது. வந்தால் சந்தோஷம்தான். வந்தால் சொல்லி அனுப்புகிறேன் என்று தனது பாணியில் சிரித்த முகத்தோடு பதிலளித்தார். அதிமுக எம்.எல்.ஏ சொன்ன கருத்து, அக்கட்சியின் பொதுச் செயலாளருக்கே தெரியவில்லை என்று பேசியது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
இதையும் படிங்க: ஈபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணையும் பாஜக எம்எல்ஏக்கள்?... விளக்கமளிக்கும் அதிமுக எம்எல்ஏ அம்மன் அர்ஜுனன்!