சென்னை: தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக மணல் அள்ளும் விவகாரம் தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 9 மாதங்களாக தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். மேலும், இந்த மணல் அள்ளும் முறைகேட்டில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர்கள் மற்றும் உரிமையாளர்கள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே சோதனை செய்து பல முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, கடந்த ஏப்ரலில் அரியலூர், கரூர், தஞ்சாவூர், திருச்சி, வேலூர் ஆகிய ஐந்து மாவட்ட ஆட்சியர்கள் சென்னை அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் விசாரணைக்கு ஆஜராகி தங்கள் விளக்கங்களை அளித்தனர். மேலும், முறைகேடாக மணல் அள்ளிய இந்த வழக்கில், ரூ.130 கோடி அளவிலான அசையும் சொத்துக்களையும், ரூ.128 கோடி மதிப்பிலான அசையா சொத்துக்களையும் முடக்கி உள்ளதாக அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக மணல் அள்ளும் விவகாரம் தொடர்பாக, அமலாகத்துறை அதிகாரிகள் தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளனர், அந்த கடிதத்தில், “தனியார் மணல் அள்ளும் ஒப்பந்ததாரர்கள் மூலமாக சட்டவிரோதமாக சுமார் ரூ.4,730 கோடி மோசடி செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், அரசு அதிகாரிகளின் உடந்தையோடு இந்த மோசடியில் தனியார் மணல் அள்ளும் ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டு உள்ளதாகவும், இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. தொடர்ந்து, அரசு அனுமதிக்கப்பட்ட அளவைவிட சுமார் ரூ.23.64 லட்சம் யூனிட் மணல், கடந்த ஆண்டு மட்டும் அள்ளப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கிய இடத்தில், மணல் அள்ளும் ஒப்பந்ததாரர்கள், பல்வேறு இயந்திரங்களை வைத்து அனுமதிக்கப்பட்ட அளவை விட சட்டவிரோதமாக மணல் அள்ளி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசு அனுமதிக்கப்பட்ட குவாரிகளில் 4.9 ஹெக்டேர் அளவில் மட்டுமே மணல் எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில், 109 ஹெக்டேர் அளவிற்கு சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளது.
ஐந்து மாவட்டங்களில் 28 பகுதிகளில் 190 ஹெக்டேர் அளவில் மணல் எடுப்பதற்கு அரசு அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இவர்கள் சட்ட விரோதமாக 987 ஹெக்டர் அளவில் மணல் அள்ளப்பட்டுள்ளது. மேலும், சட்ட விரோதமாக மணல் அள்ளியதற்கு சாட்டிலைட் புகைப்படம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மிக தெளிவான புகைப்படங்களைக் கைப்பற்றி இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
மேலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ள ஆலோசனை மேற்கொள்வதாகவும், போலீசாரும் தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்த வேண்டும்” என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம், திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த நூலகம் - சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு - Hosur international airport