திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த 14 ஊராட்சி ஒன்றியங்களில் கட்டுப்பாட்டில் 306 கிராம ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் கிராம ஊராட்சிகளின் வருடாந்திர கணக்கு ஆய்வு செய்யும் தணிக்கை குழு கடந்த இரு தினங்களாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வருடாந்திர வரவு செலவுகளை ஆய்வு செய்து வருகிறது.
இந்த தணிக்கை குழுவில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு ஊராட்சி ஒன்றியம் மற்றும் கிராம ஊராட்சிகளில் பணியாற்றி வரும் கிராம ஊராட்சி செயலாளர்கள் லஞ்சம் கொடுப்பதாக திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறைக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இப்புகாரைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் நாகராஜன் தலைமையில் 20 பேர் கொண்ட குழு நேற்று மாலை தணிக்கை குழு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அலுவலகத்தில் பணியாற்றி வரும் அலுவலர்கள் மற்றும் ஊழியர்களிடம் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு, அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து, அதற்கான விவரங்களை சேகரித்தனர். இதில் சில அலுவலர்களிடம் கணக்கில் வராத பணம் கூடுதலாக இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்களிடம் தனியாக விசாரணை நடத்தினர்.
மேலும், கணக்கில் வராத சுமார் இரண்டு லட்ச ரூபாய்க்கும் அதிகமான பணத்தை கைப்பற்றிய போலீசார், இது குறித்து அதிகாரி அலுவலர் மற்றும் ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் சோதனையில் கணக்கில் வராத சுமார் இரண்டு லட்ச ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: திடீர் ஆய்வு: மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு! - Madurai Tahsildar Office