திருச்சி: திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள மதிமுக திருச்சி தலைமை அலுவலகத்தில், திருச்சி எம்பியும், மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "நடிகர் விஜயை பொருத்தவரை எல்லாருக்கும் எல்லாம், சமூக நீதி, மதசார்பின்மை இதனை அரசியலுக்கு வரப்போவதற்கு முன்பே செய்தார் அதனை வரவேற்கிறேன். தற்போது இருக்கக்கூடிய அரசியலில் மதவாத பிரிவினைவாதிகளை எதிர்க்கும் இரண்டாவது அணியாக திராவிடம் இருக்கிறது. அதற்குப் பிறகு மூன்றாவது அணிக்கு வாய்ப்பு குறைவு தான்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "தமிழகத்திற்கும் தமிழக மக்களுக்கும் நடிகர் விஜயின் சேவை தேவை என்ற நிலை உள்ளது. மதவாத சக்திகளுக்கு மறைமுகமாக வாய்ப்பு கொடுக்கக்கூடிய சூழல் ஏற்படக்கூடாது. எந்த சூழ்நிலையிலும் யோசித்து நிதானமாக முடிவு எடுக்க வேண்டும். யாரோ சொல்கிறார்கள் என்று முடிவெடுத்து மதவாத சக்திகளுக்கு ஆதரவாக போய் விடக்கூடாது" என பேசினார்.
மேலும், காங்கிரஸ் கட்சியில் கூட்டணி அமைச்சரவையில் இடம் தேவை என கோரிக்கை, திருமாவளவனை முதலமைச்சராக வேண்டும் என எழுப்பப்படும் கோரிக்கைகள் தொடர்பான செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ, "விசிக தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் அவர்களுடைய இயக்க நிர்வாகிகளின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கின்றனர். அது தவறு இல்லை அவர்களுடைய ஆசை" என தெரிவித்தார்.
ஆட்சியில் பங்கு விவகாரம்: "மதிமுகவை பொறுத்தவரை திமுக ஆட்சி பல நிதி நெருக்கடி இருந்தாலும் நல்ல ஆட்சியாக செயல்ப்பட்டு வருகிறது. மதிமுக திமுக கூட்டணியில் இருந்தாலும் நல்ல விஷயங்களுக்கு ஆதரவு கொடுத்தோம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட சம்பவத்திற்கு சுட்டிக்காட்டி குரல் கொடுத்தோம் ஆனால் ஆட்சியில் பங்கு என்பதில் எங்களுக்கு உடன்பாடு இல்லை" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "ஆட்சியில் பங்கு" விஜயின் அரசியல் அணுகுண்டு : வேலை செய்யுமா?