திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையில் உள்ள பெல் மைதானத்தில், நாளை (பிப்.28) நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றுகிறார். இதற்கான ஏற்பாடுகள் மாநகரப் பகுதிகளில் தீவிரமாக நடந்து வருகிறது.
பிரதமர் வருகை: தூத்துக்குடி மாவட்டத்தில் நடக்கும் அரசு விழாவில் கலந்து கொண்ட பிறகு, பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் வந்து இறங்கிறார். அங்கிருந்து கார் மூலம் சுமார் 300 மீட்டர் தொலைவில் உள்ள பொதுக்கூட்டம் மைதானத்திற்குச் சென்றடைகிறார். அங்கு, கூட்டணி கட்சித் தலைவர்கள் கலந்து கொள்ளும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
போலீசார் கண்காணிப்பு: தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பிரதமர் மோடி வருகையையொட்டி, மாநகர் பகுதி முழுவதும் போலீசாரின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மாநகரப் பகுதிகளின் எல்லைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகனங்கள் அனைத்தும் தீவிர சோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது. மேலும், பிரதமர் பொதுக்கூட்டம் நடைபெறும் சாலையில் கனரக வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.
தனியார் தங்கும் விடுதிகள், தனியார் தங்கும் குடியிருப்புகள் உள்ளிட்டவைகளும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் மைதானம் மற்றும் ஹெலிகாப்டர் இறங்குதளம் ஆகிய இடங்களில் பிரதமரின் தனிப்பிரிவு பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
ட்ரோன் பறக்க தடை: மாநகர் பகுதி முழுவதும் பிரதமர் வந்து செல்லும் நாள் வரை, ட்ரோன் கேமராக்கள் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமரின் பாதுகாப்பு குழு, மத்திய தொழில் பாதுகாப்பு படை, தமிழக போலீசார் என மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
போக்குவரத்து தடை: பிரதமரின் வருகையையொட்டி, காலை முதல் மதியம் வரை சமாதானபுரத்தில் இருந்து கேடிசி நகர் சாலையில் இரு மார்க்கங்களிலும் போக்குவரத்து தடை செய்யப்படும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுக்கூட்டம் மைதானத்திற்கு வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கு விஎம்சத்திரம், பிஎஸ்என்எல் அலுவலகம் பின்புறமும் திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரி மைதானத்திலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டப்பிங் யூனியன் தேர்தல்; தலைவர் பதவிக்கு போட்டியிடும் ராதா ரவி!