திருப்பத்தூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சூளகிரி பகுதியை சேர்ந்த சாதிக் என்பவர் சூளகிரியில் இருந்து கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஆகியவற்றை ஏற்றிக்கொண்டு வேலூர் மற்றும் ஆற்காடு பகுதிகளில் உள்ள தினசரி மார்க்கெடுகளில் விற்பனை செய்துவிட்டு, இன்று அதிகாலை மீண்டும் சூளகிரி நோக்கிச்சென்று கொண்டு இருந்தார்.
அப்போது திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த விண்ணமங்கலம் பகுதியில் உள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் லாரி சென்று கொண்டு இருந்த போது, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தேசிய நெடுஞ்சாலையில் நடுவே உள்ள இரும்பு தடுப்பு வேலியின் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியின் முன்பக்கம் நொறுங்கியதில், இடிபாடுகளில் சிக்கி லாரி ஓட்டுநர் சாதிக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர்,
நெடுஞ்சாலைத்துறையினர் உதவியுடன் லாரி இடிபாடுகளில் சிக்கிய லாரி ஓட்டுநரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இவ்விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கடல் போல் காட்சியளிக்கும் காரையாறு அணையின் கண்கொள்ளா கழுகுப் பார்வை காட்சிகள்!