தென்காசி: தமிழகம் முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நேற்று (ஏப்.19) ஒரே கட்டமாக முடித்துள்ளது. இந்த சூழலில், அதிமுக கட்சியின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தென்காசியில் இன்று (ஏப்.20) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, "அதிமுக கட்சியில் உள்ள கூட்டணி, மக்கள் நேச கூட்டணி. தென்காசி நாடாளுமன்றத் தேர்தலில் எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் இந்தத் தேர்தலை அருமையாக நடத்தி இருக்கிறோம்.
இதற்காகத் தேர்தல் அலுவலர்கள், காவல்துறை அதிகாரிகள் என அனைத்துத் தரப்பில் இருந்தும் ஒத்துழைப்பு கொடுத்தவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இந்தத் தேர்தலில் எங்களுடன் இணைந்து பணியாற்றிய கூட்டணிக் கட்சிகள், முழுமையான ஒத்துழைப்பு கொடுத்ததற்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தத் தேர்தலில் மக்கள் எனக்கு மிகுந்த ஆதரவளித்துள்ளனர். இந்தத் தேர்தலில் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். தென்காசி தொகுதியில் நான் என்ன வாக்குறுதி கொடுத்தேனோ நான் வெற்றியடைந்த பின்பு கண்டிப்பாக 100% கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன்.
மேலும், எந்த வகையிலும் பணப்பட்டுவாடா இல்லாமல் இந்தத் தேர்தலைச் சந்தித்துள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. இதே போல் வருங்காலத்திலும், எந்தவிதமான பணப்பட்டுவாடா இல்லாமல் தேர்தலைச் சந்தித்தால் நன்றாக இருக்கும்.
இந்தத் தேர்தலில் வாக்காளரின் தகுதி அணுகுமுறையைப் பார்த்து மக்கள் வாக்களித்துள்ளார்கள். தென்காசி தொகுதியைப் பொறுத்தவரையில் 20 முதல் 30 சதவிகிதம் மக்களுடைய ஓட்டுகள் இல்லாததினால் மக்கள் தங்களுடைய ஜனநாயகக் கடமையை ஆற்ற முடியாமல் போனது. இவ்வளவு வளர்ச்சியடைந்தும் ஒரு சில பேருக்கு வாக்குகள் இல்லாதது கவலை அளிக்கிறது" என்று கூறினார்.
இதையும் படிங்க: உதயநிதியின் சனாதன தர்மம் கருத்து தவறானது.. அவர் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்" - தெலங்கானா முதலமைச்சர்!