சேலம்: மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை கடந்த ஜூலை 30ஆம் தேதியன்று எட்டியது. இதனையடுத்து, அணைக்கு வரும் நீர் முழுமையாக உபரி நீராக 16 கண் மதகுகள் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. வினாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இந்த நிலையில், உபரி நீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், 16 கண் மதகுகள் தாண்டி உள்ள பகுதியில் பாறைகளுக்கு நடுவே ஒரு நாய் ஒன்று சிக்கிக் கொண்டுள்ளது. முன்னதாக, பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த நாயை விரட்ட முயற்சி செய்தனர். அப்போது, அது வேகமாக சென்று பாறைகளின் மேல் ஏறி நின்று கொண்டது.
இதனையடுத்து, அந்தப் பகுதி முழுவதும் உபரி நீர் சூழ்ந்த காரணத்தால், நான்கு நாட்களாக நாய் இந்த வெள்ள நீரைக் கடந்து கரைக்கு வர முடியாமல் தவித்தது. இதனை அறிந்த மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி, தீயணைப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, முதலில் வெள்ள நீரில் சிக்கியுள்ள நாய்க்கு உணவளிக்க உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, ட்ரோன் மூலமாக தீயணைப்புத் துறையினர் முதலில் நாய்க்கு சாப்பிடுவதற்காக பிஸ்கட் வழங்கினர். அதன் பின்பு பெரிய அளவிலான ட்ரோன் மூலமாக பிரியாணியையும் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அந்த நாயை மீட்கும் நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1.50 லட்சம் கன அடியாக சரிவு