சென்னை: தமிழ்நாட்டு வரலாற்றில் புதிதாக ஒரு அரசியல் கட்சி முளைத்திருக்கிறது. "தமிழக வெற்றி கழகம் " என்பது அதன் பெயர், நிறுவியிருப்பவர் இது நாள் வரை நடிகராகவும், இனி அரசியல்வாதியாகவும் அறியப்படப்போகும் விஜய். சரி, விஜயின் மக்கள் இயக்கம், அரசியல் கட்சியாக வடிவெடுத்திருப்பது யாருக்கு ஆபத்து, யாருடைய ஓட்டுக்கு வேட்டு வைக்கும், சற்றே அலசலாம்.
யாரை எதிர்க்கப் போகிறார் விஜய்? கட்சியின் பெயருக்கான டேக் லைனிலேயே, "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்ற திருவள்ளுவரின் வரியைக் கொண்டு வந்திருக்கிறார் விஜய். தற்போதைய அரசியல் சூழல், ஊழல் மலிந்த அரசியல் கலாச்சாரம் ஒருபுறம், சாதி மத பேதங்கள் வாயிலாக பிளவுபடுத்தும் அரசியல் கலாச்சாரம் மறுபுறம் என ஒற்றுமைக்கும், முன்னேற்றத்திற்குமான முட்டுக்கட்டைகள் நிறைந்துள்ளன என பாகுபாடு இல்லாமல் கட்சி துவங்குவதற்கான முன்னுரையிலேயே சாடியுள்ளார்.
விஜயகாந்த்திடமிருந்து கற்ற பாடம்: சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி விஜய்க்கு வழிகாட்டியாக விஜயகாந்த்தை கூறலாம். "எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்து நீண்டகாலமாக என்னை அதற்கு தயார்படுத்தி, மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன்" என குறிப்பிடுகிறார் விஜய். பொதுவாகவே என்ன செய்ய வேண்டும் என்பதைக் காட்டிலும், எதை செய்து விடக் கூடாது என்பதில் மிகுந்த ஆராய்ச்சியும், கவனமும் கொண்டுள்ளதாகவே தெரிகிறது.
முன்னதாகவே சினிமாவுக்கு வந்தாலும், விஜயகாந்த் மூலம் தனது சினிமா வாழ்க்கைக்கு மைலேஜ் ஏற்றிக் கொண்டவர், விஜய். அரசியலைப் பொறுத்தவரையிலும், கட்சி ஆரம்பிக்கும் முன்னதாகவே தனது ரசிகர்களை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வைத்தவர், விஜயகாந்த். இதே பாணியைத்தான் தற்போது விஜயும் செயல்படுத்தியிருக்கிறார். கடந்த, 2021ஆம் ஆண்டு நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தினர், போட்டியிட்ட 169 வார்டுகளில் 115-இல் வெற்றி பெற்றனர்.
முதல் தேர்தலில் என்ன நடக்கும்? விஜயகாந்த் போட்டியிட்ட முதல் தேர்தலான 2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், தமிழ்நாடு முழுவதும் அவரது வேட்பாளர்கள் 8 சதவீத வாக்குளைப் பெற்றனர். ஆனாலும் இது தொகுதிகளாக மாறவில்லை. விஜயகாந்த் மட்டுமே ஒரே எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று, சட்டமன்றத்தில் நுழைந்தார். ஆனால் இது கருணாநிதி, ஜெயலலிதா என்ற பெரும் ஆளுமைகள் இருந்த சமகாலத்தில் நிகழ்ந்தது. இந்த பெரும் தலைவர்கள் இல்லாத வெற்றிடம் தற்போது வரவிருக்கும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் இல்லை என நிரூபிக்க வேண்டிய அவசியம் மற்ற கட்சிகளுக்கே ஏற்பட்டுள்ளது என கூறலாம்.
தற்போதைய அரசியல் சூழல்? தமிழ்நாட்டைப் பொறுத்தவரையிலும், நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதில் திமுக கூட்டணி தவிர்த்து, மற்ற கட்சிகளிடையே ஒரு தெளிவற்ற சூழல் நிலவுவதைப் பார்க்க முடிகிறது. அதிமுகவைப் பொறுத்தவரையிலும், எடப்பாடி பழனிசாமி கூட்டணி இல்லை என்ற முடிவுடன் களமிறங்கிய போதிலும், அயோத்தி ராமர் கோயில் உள்ளிட்ட விவகாரங்களில், கால்வலி என்ற காரணத்தைதான் கூற முடிகிறது. கொள்கை ரீதியிலான பதில் அவரிடமிருந்து கிடைக்கவில்லை.
ஓ.பன்னீர்செல்வமோ, எடப்பாடி பழனிசாமி மட்டுமல்லாமல் அதிமுக கூட்டணி அமைப்போம் என வியூகத்தை கூறி வருகிறார். பாஜக, டிடிவி தினகரன், சசிகலா என வேறு வகையில் அவரது கூட்டணி கணக்கு உள்ளது. பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட கட்சிகள் திமுக எதிர்ப்பு என்ற திட்டத்தில் இருந்தாலும், எந்தப் பக்கம் பாயப் போகிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
இப்படிப்பட்ட அரசியல் சூழல் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடருமானால், விஜயின் மக்கள் இயக்கம் புகுந்து புறப்பட்டு வாக்குகளை அள்ளுவதற்கு பிரகாசமான சூழல் இருக்கும் என்றே கட்டியம் கூறலாம். தமிழ்நாடு, புதுச்சேரியில் சுமார் 80,000 மக்கள் இயக்க கிளைகள் ஒவ்வொன்றிலும் குறைந்தபட்சம் 25 உறுப்பினர்களாவது உள்ளனர். இவர்கள் அனைவரையுமே அரசியல்படுத்தும் முடிவெடுத்து, அதற்கான கால அவகாசத்தையும் கூறியிருக்கிறார் விஜய்.
அதிமுக ஓட்டுக்கு ஆபத்தா? தற்போது மீண்டும் விஜயகாந்த் உதாரணத்திற்கு வரலாம். சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்தோரில் கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என வரிசை நீண்டாலும், நடிகர் என்ற முறையில் எம்.ஜி.ஆரை தனது ஆதர்சமாக எடுத்துக் கொண்டவர், விஜயகாந்த். எம்.ஜி.ஆர் பயன்படுத்திய அதே பிரசார வேனை வாங்கி பயன்படுத்தியது, கருப்பு எம்.ஜி.ஆர் மைலேஜ் என ஏகத்துக்கும் எம்.ஜி.ஆர் புகழை பாடியே விஜயகாந்த்தின் பிரசாரம் இருந்தது.
இந்த பக்கம் விஜயைப் பார்த்தால், தனது தொடக்க காலங்களில் திரைப்படங்களில் ரஜினி ரசிகராக தன்னை காட்டிக் கொண்டவர் விஜய். "அண்ணாமலை தம்பி இங்கே ஆட வந்தேன்டா" என ஒலித்த குரல், இளைய தளபதியிலிருந்து, தளபதியாக புரமோஷன் ஆன பிறகு சற்றே தொனி மாறியது.
மெர்சல் உள்ளிட்ட திரைப்படங்களில் வாத்தியார் எம்.ஜி.ஆர். ரசிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். இந்த கால கட்டங்களில் விஜய் , ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் போட்டுக் கொண்ட சண்டை குறித்து சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
இந்த வகையில், தலித் மற்றும் எம்ஜிஆர் பாசம் கொண்டோரின் வாக்குகளை விஜய் குறிவைக்கும் பட்சத்தில் திமுகவுக்கு எதிரான ஓட்டுகள் அல்லது அதிமுக ஆதரவு ஓட்டுகள் திசை மாறுவதற்கு பிரகாசமான வாய்ப்புகள் உள்ளன. இதற்கான ஃபார்முலாவும் விஜயகாந்த் வகுத்ததுதான். ஆனால் ஜெயலலிதா இல்லாத இந்த காலகட்டம் விஜய்க்கு கூடுதலாக உதவுமா என்பதும் கேள்வியே.
Crowd Pulling எனப்படும் மக்கள் திரளை ஈர்க்கும் நடிகராக விஜய் இருக்கிறார். சமீப காலங்களில் ஷூட்டிங் ஸ்பாட்களில் செல்பி புகைப்படம் எடுத்து, இதனை சிம்பாலிக்காக காட்டியிருக்கிறார் விஜய். ஆனால், இதெல்லாம் அரசியலாக உதவுமா என்பதை 2 ஆண்டுகள் பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: தமிழக வெற்றி கழகம் கூட்டணியில் இறங்குமா? திராவிட கட்சிகளுக்கு இணையான போட்டியா? - செய்தித் தொடர்பாளர் அளித்த பிரத்யேக தகவல்!