விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் அரசு கல்லூரியில் படித்து வருபவர் 21 வயது மாணவி. இவர், கடந்த வாரம் வீட்டில் வேலை பார்த்து கொண்டிருந்த போது, தவறி விழுந்துள்ளார். கீழே விழுந்ததில், மாணவிக்கு இடுப்பில் வலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, விழுப்புரம் ரங்கநாதன் தெருவில் இயங்கி வரும் தனியார் எலும்பு முறிவு மருத்துவமனைக்கு மாணவி சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
அங்கு மாணவிக்கு எலும்பு முறிவு மருத்துவரான பொய்யாப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மருத்துவர் சந்தோஷ் குமார், மருத்துவம் பார்த்துள்ளார். கடந்த 4 நாட்களுக்கு மேலாக நாள்தோறும் வந்து பிசியோதெரபி சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு சிகிச்சைக்காக வந்த கல்லூரி மாணவிக்கு மருத்துவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, கல்லூரி மாணவி, மருத்துவரை கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றதாக தெரிகிறது. அதனை தொடர்ந்து, மருத்துவர் பாலியல் சீண்டலில் ஈடுப்பட்டது மாணவியின் சித்தி மற்றும் உறவினர்களுக்கு தெரிய வந்த நிலையில், அவர்கள் மருத்துவமனைக்கு நேரில் சென்று அந்த மருத்துவரை அடித்து, விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்தில் கொண்டு சென்று ஒப்படைத்தனர்.
மாணவியின் குடும்பத்தினர் தாக்கியதில் காயமடைந்த மருத்துவர் சந்தோஷ்குமாரை காவல்துறையினர் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பியதோடு, இதுகுறித்து பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியிடம் புகார் மனு பெற்றுக்கொண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சம்பந்தப்பட்ட மருத்துவமனை மீது கல்லூரி மாணவியின் உறவினர்கள் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் அந்த மருத்துவமனை முன்பு போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.