சென்னை: பெண்கள் கர்பவிக்கும் நாள் தொடங்கி குழந்தை பிறந்து வளரும் காலம் முழுவதும் என தாய் மற்றும் குழந்தையின் உலகம் இருவரையே சுற்றி வந்தது. தற்போது அந்த உலகத்தில் மாறுதல் ஏற்பட்டு குழந்தையை பராமரிக்க ஆண்களும் தயாராகி வருகின்றனர். ஆனால், குழந்தை வளர்ப்பில் ஆணின் பங்கு என்ன? இவ்வளவு காலமாக ஆணின் ஈடுபாடு இல்லாததால் அவர்கள் தவறவிட்டது என்ன? என்பதை யுனிசெஃப் அமைப்பு (United Nations Children's Fund) உலக தந்தையர் தின நாளில் பதிவொன்றை வெளியிட்டுள்ளது.
உலக முழுவதும், வேலைக்கு செல்லும் பெண்கள் மகப்பேறு காலத்தில், சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்து குழந்தையை பார்த்துக்கொள்வது போல ஆண்களுக்கு அதிக வசதி இருப்பதில்லை. ஆனால், குழந்தையின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தும் நாடுகளில் ஒன்றாக இருக்கும் மால்டோவா, பெற்றோருக்குத் தங்கள் குழந்தைகளைப் பராமரிக்கத் தேவையான நேரம், வளங்கள் மற்றும் தகவல்களை வழங்குகின்றன.
பொன்னான காலத்தில் தந்தையின் பங்கு: ஒரு மனிதனின் வாழ்நாட்களில், முதல் 1,000 நாட்களை விட மூளை வளர்ச்சிக்கு முக்கியமான காலம் எதுவுமில்லை என்பதை நாம் அனைவரும் அறிந்திருக்க கூடும். குழந்தையின் ஆயுட்காலம் முழுவதும் நிர்ணயம் செய்யக்கூடிய ஆரோக்கியம், வளர்ச்சி, என்பதற்கு அடித்தளமாக இருப்பது இந்த முதல் 1,000 நாட்கள். அதாவது, கருத்தரிப்பதற்கும் குழந்தையின் இரண்டாவது பிறந்தநாளுக்கும் இடைப்பட்ட காலம். இந்த காலத்தில், குழந்தைகளுக்கு ஏற்படும் மாற்றங்களுக்கு தந்தையின் பங்கு அதிகம்.
அதனால்தான், தாய்மார்களுக்கு முழு ஊதியத்துடன் ஆறு மாத விடுமுறையும், தந்தைகளுக்கு 8 முதல் 16 வார விடுப்புகளையும் யுனிசெஃப் வழங்குகிறது. இந்த தந்தையர் தின நாளில், தங்களது மகனோ அல்லது மகளோ சிறந்த ஆண் அல்லது பெண்ணாக வளர்வதற்கு உங்களது பங்கு மிக முக்கியமானது என்பதை நினைவில் வைத்து கொள்ள வேண்டும்.
குழந்தையின் எதிர்காலத்திற்கு உங்கள் செயல் தான் அடித்தளம்: கற்ப காலத்தில் மணைவிக்கு உறுதுணையாகவும், வீட்டு வேலைகளில் ஈடுபடுவதாலும் தங்களது மகன்களுக்கு முன் உதாரணமாக விளங்குவார்கள். இதனை பார்த்து வளரும் மகள்களும் நியாயமான மற்றும் சமமான சமூகத்தில் வாழ முற்படுவார்கள். குழந்தை ஆரோக்கியமாக வளர வேண்டும் என நினைத்தால் தடுப்பூசிகள் மற்றும் பரிசோதனைகளுக்காக குழந்தைகளை மருத்துவமனைக்கு எடுத்து செல்வது முதலீடாக அமையும்.
பெண்களுக்கு பிரசவ காலத்தின் போது வழங்கப்படுகின்ற பிரசவ விடுமுறையினை போன்று தந்தைகளுக்கும் அக்காலத்தில் விடுமுறை வழங்கப்பட வேண்டும் என சர்வதேச ரீதியில் பேசப்பட்டு வருகின்றது. இதனை சர்வதேச நாடுகளும் அங்கீகரித்து வருகின்றன. குழந்தையின் மருத்துவம், மன ரீதியிலான செயல்பாட்டில் தந்தையில் பங்களிப்பு இருந்தால் எதிர்காலங்களில் வரக்கூடிய பிரச்சனைகளை எளிதில் எதிர் கொள்ளலாம்.
மால்டோவா, 2016 ஆம் ஆண்டு குழந்தை பராமரிப்பு விடுப்பு குறித்த சட்டத்தை ஏற்றுக்கொண்டதில் இருந்து, ஆயிரக்கணக்கான தந்தைகள் சட்டத்தால் வழங்கப்பட்ட 14 நாட்களுக்கு தங்கள் குடும்பங்களுடன் ஒன்றாக இருக்க வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.