தஞ்சாவூர்: தனியார் நாளிதழில் ஒன்றில், கடந்த 10 ஆண்டுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்வை குறிப்பிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தந்துள்ள விளம்பரம் குறித்து விளக்கமளிக்க முன்னாள் அதிமுக அமைச்சர் ஓ.எஸ் மணியன் நேற்று கும்பகோணம் அதிமுக மாநகர அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "தனியார் நாளிதழில் ஒன்றில், திமுக சார்பில், 10 ஆண்டுகளில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து ஒரு விளம்பரம் அளித்து, அதில் விலை உயர்விற்கு காரணமானவர்களை வாக்குகளால் விரட்டியடியுங்கள் என குறிப்பிட்டுள்ளார். அதில், 2014ல் பெட்ரோல் விலை லிட்டர் ரூ 66.37 என்றும் தற்போது 2024ல் ரூ. 100.75 என்றும், அதுபோல 2014ல் டீசல் விலை லிட்டர் ரூ 53.38 ஆக இருந்தது தற்போது 2024ல் ரூ.92.44 ஆக உள்ளது என விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
ஆனால், இதில் உண்மை நிலவரம் என்வென்றால், இன்றைய பெட்ரோலின் அடிப்படை விலை லிட்டருக்கு 57.30 ரூபாய். மத்திய அரசு வரி ரூ 19.90, தமிழக அரசின் வரி ரூ 21.56, டீலர் கமிஷன் ரூ 3.48 ஆக மொத்தம் விலை 102.24 ரூபாய். அதுபோலவே இன்றைக்கு டீசலின் அடிப்படை விலை லிட்டருக்கு 58.06 ரூபாய். மத்திய அரசின் வரி ரூ 15.80, தமிழக அரசின் வரி ரூ 17.74, டீலர் கமிஷன் ரூ 2.24 ஆக மொத்தம் விலை 93.84 ரூபாய். இதன்படி பார்த்தால் பெட்ரோலில் தமிழக அரசு, மத்திய அரசை காட்டிலும் லிட்டர் ஒன்றுக்கு ரூ 1.66 கூடுதலாகவும், டீசலில் லிட்டர் ஒன்றுக்கு ரூ 1.94 கூடுதலாக தமிழக மக்களிடமிருந்து வரி வசூலிக்கிறது எனவே விலை உயர்விற்கு ஆளும் திமுக தலைமையிலான தமிழக அரசை காரணம்.
எனவே, மு க ஸ்டாலின் கூற்றுப்படி, திமுகவையும், திமுக கூட்டணியையும், மு க ஸ்டாலினையும் தான் தமிழக வாக்காளர்கள் தங்கள் வாக்குகளால் விரட்டியடிக்க வேண்டும். இந்த விளம்பரம் ஒரு பச்சை மோசடியான விளம்பரம்” என்றார். அதனை தொடர்ந்தும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, ஜெயலலிதா எதிர்த்த நீட்டிற்கு, எடப்பாடி ஆதரவாக செயல்பட்டார் என குற்றம் சாட்டியுள்ளார் என்ற கேள்விக்கு பதிலளித்தவர், அவர் காங்கிரஸ் கட்சியின் திடீர் தலைவர், எனவே அவர் குபீர் என தான் பதிலளிப்பார்.
நீட் தேர்வை ஜெயலலிதா அமல்படுத்திட மாணவர்களையும், ஆசிரியர்களையும் தயார் செய்ய ஒர் ஆண்டு காலம் அவகாசம் தான் கோரினார் எனவும் தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலமும் நீட் தேர்வை எதிர்க்கவில்லை என்றார். பாஜகவிற்கும் அதிமுகவிற்கும் கள்ள உறவு உள்ளதாக எதிர்கட்சியினர் விமர்சனம் செய்வது குறித்து எழுப்பிய கேள்விக்கு, “கழக பொதுச் செயலாளர் எடப்பாடி, பொதுக்குழு நிர்வாகிகளின் ஏகமனதான முடிவின்படியே, பாஜகவோடு இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என்பதோடு, ஒரு போதும் இல்லை என்றும் திட்டவட்டமாகவும் தெளிவாகவும் அறிவித்தார்.
அந்த கருத்தில் எப்போதும் கடுகளவும் அணுவளவும் மாற்றம் இல்லை” என பதிலளித்தார். மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவே இருக்காது என கூறியுள்ளாரே என்ற கேள்விக்கு, அவர் என்ன அவ்வளவு பெரிய மந்திரவாதியா என ஓ எஸ் மணியன் தெரிவித்தார்.