தஞ்சாவூர்: அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாக அமைந்துள்ளது, சுவாமிமலை. இங்கு 60 தமிழ் வருடங்கள் பெயரில் 60 படிகளைக் கொண்ட இக்கட்டுமலை கோயிலுக்கு 60 படிக்கட்டுகளை கடந்து மேலே சென்றுதான் மூலவர் சுவாமிநாதசுவாமியை தரிசனம் செய்ய முடியும்.
இந்நிலையில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், உடல் நலம் பாதிக்கப்பட்டோர் எளிதாக சாமி தரிசனம் செய்ய இயலாது. அதனால், இங்கு பக்தர்கள் வசதிக்காக மின் தூக்கி அமைக்க வேண்டும் என்பது கடந்த 30 ஆண்டு கால கோரிக்கையாக நீடித்து வருகிறது.
இந்த கோரிக்கையை பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா தொடர்ந்து சட்டமன்றத்தில் வலியுறுத்தி வந்தார். இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று (பிப்.17) காணொலிக் காட்சி வாயிலாக, 3 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பில், மின் தூக்கி வசதி அமைப்பதற்கான பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
அதே நேரத்தில், சுவாமிமலை கோயில் வளாகத்தில் நடைபெற்ற விழாவில், இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை மண்டல இணை ஆணையர் மோகனசுந்தரம், திருக்கோயில் துணை ஆணையர் உமாதேவி, அறங்காவலர் குழுவினர் மாநிலங்களவை எம்.பி எஸ்.கல்யாணசுந்தரம், கும்பகோணம் மாநகராட்சி மேயர் கே.சரவணன் உள்ளிட்ட பலர் பூமி பூஜையில் நேரடியாக பங்கேற்று செங்கற்களை எடுத்து கொடுத்து, மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, மலர் தூவினர்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய எம்.பி எஸ்.கல்யாணசுந்தரம், “பக்தர்களின் வசதிக்காக ரூபாய் 3 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில், மின்தூக்கி அமைக்க தமிழக முதலமைச்சரால் காணொலிக் காட்சி வாயிலாக பூமி பூஜை சுவாமிமலை கோயிலில் நடைபெற்றது. 20 பேர் பயணிக்கும் 2 மின் தூக்கிகளுக்கு திட்ட மதிப்பீடு ரூபாய் 3 கோடியே 55 லட்சமா? இவ்வளவு தேவையா ? தேவைப்படாதே என அதிர்ச்சி தெரிவித்தார்.
பின்னர், கடந்த 1990 - 1991ஆம் ஆண்டு குடியரசுத் துணை தலைவர் சங்கர் தயாள்சர்மா இங்கு வந்தபோது, அவர் 60 படிகள் ஏறி தரிசனம் செய்ய சிரமப்பட்ட நிலையில், மின்தூக்கி வசதி வேண்டும் என கோரியபோது, தனியார் வங்கியான சிட்டி யூனியன் வங்கி, தனது சொந்த நிதியில் இருந்து அமைத்து தர முன்வந்த போதும், ஆகமத்தில் அதற்கு இடம் இல்லை வழியில்லை என மறுத்த நிலையில், இப்பணி தடைபட்டது.
தற்போது, 33 ஆண்டுகளுக்குப் பிறகு இதே கோயிலில் தற்போது மின்தூக்கி அமைக்க பூமி பூஜை நடைபெற்றுள்ளது. பணி விரைந்து முடித்தபின், பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என தெரிவித்த அவர், இணை ஆணையரரை, எந்த மின் தூக்கி நிறுவனத்திற்கு வேண்டுமானாலும் அனுமதி கொடுங்கள். ஆனால், அதனை நன்றாக பார்த்து தெரிந்து, அறிந்து, ஆய்வு செய்து கொடுங்கள். காரணம் அவர்கள் காட்டும்போது ஒன்றாக இருக்கும், செய்து முடிக்கும்போது ஒன்றாக இருக்கும்" எனக் கூறினார்.
இதையும் படிங்க: பிரதமர் மோடி கொடுத்த கேரண்டிகள் என்ன ஆனது? - டி.ஆர்.பாலு கடும் தாக்கு!