சென்னை: நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு, நாடு முழுவதும் 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு முதற்கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. நாகாலாந்து மற்றும் மணிப்பூரில் ஓரிரு இடங்களில் வன்முறை ஏற்பட்ட நிலையில், பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையிலேயே தேர்தல் நடைபெற்றது.
இதற்கிடையே அடுத்த கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாகப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் ராஜஸ்தானும் ஒன்று. இங்கு, பாஜக மற்றும் காங்கிரஸ் நேரடியாகக் களம் காண்கிறது. இதனால், அங்குத் தீவிரமான பிரச்சாரம் நடந்து வருகிறது.
இந்நிலையில், ராஜஸ்தானில் நேற்று (ஏப்ரல் 21) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. பொதுக்கூட்டத்தில் பிரதமர் கூறியதாவது, "மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் உரிமை உண்டு என்று கூறியது. பெண்கள் வைத்திருக்கும் தங்கம் பங்கீடு செய்யப்படும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த செல்வத்தைக் காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்." இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது இணையத்தில் வேகமாகப் பரவி சர்ச்சையான நிலையில், எதிர்க்கட்சிகள் பலரும் பிரதமரின் கருத்திற்கு கடும் விமர்சனங்களைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இதற்கு திமுக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “தேர்தல் ஆணையத்தின் ஆன்மா சாந்தியடையட்டும் (Rest in Peace.. Election Commission of India)” என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து, திமுகவின் செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் அண்ணாதுரை தனது எக்ஸ் பக்கத்தில், "தோல்வி பயத்தில் பிரதமர் மோடி அவர்கள் பிதற்ற ஆரம்பித்துவிட்டார். இஸ்லாமியர்களைக் கேவலம் ஓட்டுக்காக இப்படி பேசலாமா? நெஞ்சம் பதைபதைக்கிறது!" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஊரோடும் மதுரையில் தேரோட்ட திருவிழா! பக்தர்கள் வடம் பிடிக்க கோலாகலமாக துவங்கியது.. - Madurai Chithirai Festival