திருநெல்வேலி: திமுக தலைமை செய்தி தொடர்பாளர் பேராசிரியர் கான்ஸ்டைன் ரவீந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "அம்பாசமுத்திரத்தில் பிரதமர் மோடி பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில், குற்றப் பின்னணி உள்ள வேட்பாளர் நயினார் நாகேந்திரனை அருகில் வைத்துக் கொண்டு ஊழல் அற்ற ஆட்சி தருவோம் என்ற அவர் பேச்சு வேடிக்கையாக உள்ளது.
கடந்த 13ஆம் தேதி, சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்களிடம் இருந்து பிடிபட்டது. இந்த பணம் வாக்காளர்களுக்குக் கொடுக்கக் கொண்டு செல்லப்படுவதாக முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், பிடிபட்ட நபர்களிடம் நயினார் நாகேந்திரனின் விசிட்டிங் கார்டு இருந்துள்ளது, அவர்களும், வாக்காளர்களுக்குக் கொடுக்க பணம் கொண்டு செல்வதாக ஒப்புதல் அளித்துள்ளனர். வேட்பு மனு தாக்கலின் போது நயினார் நாகேந்திரன் அபிடவிட்டில் தனது சொத்து மதிப்பு 88 லட்சம் என கூறியுள்ளார்.
எனவே, அவரது ஆதரவாளர்களிடம் பிடிக்கப்பட்ட 4 கோடி கருப்புப் பணம் அல்லது கள்ள பணம் ஆகும். இதுதொடர்பாக அவருக்குச் சம்மனும் அனுப்பப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நபரை அருகில் வைத்துக் கொண்டு மோடி ஊழலற்ற ஆட்சி தருவதாகப் பேசுகிறார்.
மேலும், பாஜகவின் தலைமைத் தேர்தல் காரியாலயம், அவருக்குச் சொந்தமான ஓட்டல் வாகன நிறுத்தத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைத்துள்ளார்கள். இதுகுறித்து மத்திய மாவட்ட பொறுப்பாளர் டிபிஎம் மைதீன்கான் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வாகன நிறுத்தத்தில் தேர்தல் அலுவலகம் அமைத்தது சட்டப்படி குற்றம் என்றும், உடனடியாக தேர்தல் அலுவலகத்தை அகற்ற வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலர் உத்தரவிட்டு நயினார் நாகேந்திரனுக்கு நோட்டீசும் அனுப்பியுள்ளார்.
அதுபோன்று, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு இடத்தை ஆக்கிரமித்து முறைகேடாக 100 கோடி ரூபாய்க்கு நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் வேட்பாளர் நயினார் நாகேந்திரன் புதல்வர் நயினார் பாலாஜி பத்திரப் பதிவு செய்துள்ளார். இது முறைகேடானது என பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையெல்லாம் பார்க்கும் போது பிரதமர் பேச்சு முரணாக உள்ளது. மேலும் மோடி பிரச்சாரம் செய்யும் இடங்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயரைக் கூறுகிறார். இதிலிருந்தே அதிமுக, பாஜக இடையே கள்ள உறவு இருப்பது தெரிகிறது.
இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். காமராஜர் பெயரை மோடி கூறுகிறார் 1966ஆம் ஆண்டு காமராஜர் பசுவதை தடைச் சட்டத்திற்கு எதிராகக் குரல் கொடுத்ததால் டெல்லியில் காமராஜரை மோடியின் முன்னோடிகள் தீ வைத்து எரித்து கொலை செய்ய முயற்சித்ததை மறக்க முடியாது. இது போன்ற அரசியல் தலைவர்களைப் புறக்கணிக்க வேண்டும்.
திருநெல்வேலி குலவணிகர்புரத்தில் புதிய ஒய் வடிவிலான ரயில்வே பாலம் கட்டுவேன் என தேர்தல் அறிக்கையில் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். ஆனால் 15 ஆண்டுகளுக்கு முன் அந்தப் பாலம் கட்ட துவங்கும் போது அவர் தான் அந்த திட்டத்தைத் தடை செய்தார். நயினார் நாகேந்திரன் எங்களுக்கு ஒரு பொருட்டே அல்ல, தேர்தலில் அவர் நோட்டாவோடு தான் போட்டியிடுகிறார்” என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வாக்குறுதியை நிறைவேற்றாத பிரதமர் மோடி.. அல்வா, பக்கோடா கொடுத்து வாக்கு சேகரித்த ம.ஜ.கட்சியினர்! - Lok Sabha Election 2024