சென்னை: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரக்கூடிய சூழலில் தொகுதி பங்கீடு குறித்து திமுக மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இடையேயான முதல்கட்ட பேச்சு வார்த்தை இன்று (ஜன. 28) மாலை 3 மணியளவில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை தி.மு.கவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்றது.
இதனிடையே, இந்த பேச்சுவார்த்தை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியினர் ஆலோசனைக் கூட்டத்தில் ஈடுபட்டு, அதில், கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 8 தொகுதிகள், தோல்வி அடைந்த தேனி, மற்றும் கூடுதலாக 12 தொகுதிகள் என மொத்தம் 21 தொகுதிகளை கேட்க முடிவெடுக்கப்பட்டதாக தகவல் சமூக வலைத்தளங்களில் அறிக்கையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த பட்டியலில், கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், காங்கிரஸ் வெற்றி பெற்ற திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளுடன், தோல்வி அடைந்த தேனி மற்றும் கூடுதலாக திருநெல்வேலி, ராமநாதபுரம், திண்டுக்கல், காஞ்சிபுரம் உட்பட 12 தொகுதிகள் என 21 தொகுதிகள் காங்கிரஸ் தரப்பில் கேட்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தரப்பில் எந்த வித பாட்டியலும் வெளியிடவில்லை என காங்கிரஸ் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், "2024 மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள் குறித்த ஆதாரமற்ற ஒரு பட்டியல் ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதுபோல, எந்த பட்டியலும் காங்கிரஸ் கட்சியால் தயாரிக்கப்படவும் இல்லை, கொடுக்கப்படவும் இல்லை. இது முற்றிலும் தவறான செய்தி என மறுக்க விரும்புகிறோம்" எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஏற்கனவே, பீகார் மாநில முதலமைச்சர் இந்தியா கூட்டணியில் இருந்து விலகியது, பாஜகவுடன் இணைந்தது நாடு முழுவதும் அரசியல் வட்டாரங்களில் பேசு பொருளாக மாறியதோடு, இந்தியா கூட்டணியில் இருக்கும் திமுக உள்ளிட்ட பிற கட்சிகளுக்கு பெரும் அதிருப்தியை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் தரப்பில் தொகுதி பங்கீடு கூட்டத்தில் 21 தொகுதிகள் கேட்க உள்ளதாக வெளியான பட்டியல் விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் ராஜினாமா..! மாலையே மீண்டும் முதலமைச்சர் ஆகிறார்..!