சென்னை: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி 59 பேர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று (ஜுன் 25) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விஜயபிரபாகரன் கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜயபிரபாகரன், “கிராமங்களில் கள்ளச்சாராயம் பெண்களின் தாலியை அறுக்கிறது. நகர்ப்புறங்களில் டாஸ்மாக் குடும்ப வாழ்கையை அழிக்கிறது. மக்களின் வாழ்வாதாரத்திற்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் கொடுக்க வேண்டும்.
மேலும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் குறித்த வழக்கை உடனடியாக சிபிஐ (CBI)க்கு மாற்ற வேண்டும். கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்ததற்கு ரூ.10 லட்சம் கொடுக்கின்றீர்கள். இதனால்,வாழ்க்கையை வெறுத்த ஒரு நபர் அல்லது வேலைவாய்ப்பு இல்லாத ஒரு நபர் தன் குடும்ப சூழ்நிலையை யோசித்து கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துவிடலாம். இறந்தால் ரூ.10 லட்சம் கிடைக்கும், இதனால் குடும்பம் பயன்பெறும் என்று எண்ணினால் என்ன செய்வீர்கள்?," என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், "கள்ளச்சாராயத்தால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். மக்களின் வரிப்பணத்தையே அவர்களுக்கு திரும்ப கொடுக்கிறீர்கள். உங்கள் அனைவரின் பெயரில் நிதி உள்ளது. ஆனால், மக்களுக்கு நிதி இல்லை. நாம் அனைத்து மாநிலங்களையும் குறை சொல்கிறோம். ஆனால், நம் மாநிலம் எப்படி இருக்கிறது என்பதை யோசிக்க வேண்டும்.
திமுக மற்றும் பாஜகவின் நாடகம் அனைவரையும் ஏமாற்றுவது. கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரத்தை திசை திருப்பும் நோக்கத்தில் தான் அப்துல்கலாம் பிறந்தநாளை அரசு விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது" என்று விஜய பிரபாகரன் பேசினார்.
புதுக்கோட்டையில்: இதேபோல், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சம்பவம் தொடர்பாக திமுக அரசை கண்டித்து புதுக்கோட்டை திலகர் திடலில் தேமுதிக சார்பில் மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில், நகர செயலாளர் பரமஜோதி முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான தேமுதிகவினர் கழுத்தில் மதுபாட்டில் மற்றும் பாக்கெட் சாராயம் போல் மாலை அணிந்து காவல்துறை மற்றும் திமுக அரசை கண்டித்து முழக்கம் எழுப்பினர். இதில், தேமுதிகவினர் மற்றும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தேமுதிகவினரை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: “கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அறிக்கை தயார்” - தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்! - KALLAKURICHI Hooch Tragedy Report