விருதுநகர்: செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, நாடு முழுவதும் அதற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்து வருகிறது. அந்த வகையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள ஆன்மீக நற்பணி மன்றம் சார்பில், இந்த ஆண்டு 37வது விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
அதற்காக 5 ரதங்களில் 6 விதமான விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒரே ரதத்தில் முன்பக்கம் குரோதி கணபதி, பின்பக்கம் மோட்ச கணபதி என 2 பெரிய அளவிலான சிலைகள் தயார் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்க வீர விளையாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக, தம்பி முருகனுடன் சிலம்பம் விளையாடும் விநாயகர் சிலை செய்யப்பட்டுள்ளது.
விவசாயத்திற்கு முக்கியத்துவம் தரும் வண்ணம், ட்ரை சைக்கிளில் விநாயகர் முருகனுடன் தென்னங்கீற்றுகளை எடுத்துச் செல்வது, முருகனை அழைத்துக் கொண்டு மாருதி காரில் விநாயகர் நகர் வலம் செல்வது, குழந்தைகளைக் கவரும் வகையில் தம்பி முருகனுடன் விநாயகர் சறுக்கி விளையாடுவது போன்ற 6 சிலைகள் விதவிதமாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சிலைகள் கடந்த ஒரு மாதமாக நாகை மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்பதிகள் இணைந்து சுற்றுச்சூழலைப் பாதிக்காத வண்ணம் மரவள்ளிக் கிழங்கு மாவு, தேங்காய் நார் உள்ளிட்ட மூலப் பொருட்களால் உருவாக்கியுள்ளனர். மேலும், 6 வர்ணம் பூசும் கலைஞர்கள் இணைந்து சிலைகளுக்கான வர்ணங்களை வாட்டர் பெயிண்ட் எனப்படும் தண்ணீரில் கரையும் சாயத்தின் மூலம் கண்களைக் கவரும் வண்ணம் மெருகேற்றியுள்ளனர்.
தற்போது, இந்த சிலைகள் வடக்கு காவல் நிலையம் அருகே அமைக்கப்பட்டுள்ள பந்தலுக்கு மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு, சுமார் 8 நாட்கள் வரை நடைபெறும் விநாயகர் சதுர்த்தி விழாவில், 3 வேளை அன்னதானமும், இலவச திருமணங்கள், இயலாதவர்களுக்கு நலத்திட்டங்கள், ஆன்மீக சொற்பொழிவுகள் என பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளது. அதைத் தொடர்ந்து, வரும் 7ஆம் தேதி இரவு இந்த சிலைகள் அனைத்தும் கண்மாயில் கரைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: இந்த வருஷம் எந்த ட்ரெண்டிங்கில் விநாயகர்? சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரம்!