தருமபுரி: தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து கடிதம் ஒன்றை வழங்கி உள்ளார். அந்த கடிதத்தில், "தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் மிக மிகக் கடுமையான வறட்சி ஏற்பட்டு அணைகள், ஏரிகள், குளங்கள் நீரின்றி வறண்டு காட்சியளிக்கின்றன.
தருமபுரி மாவட்டத்திற்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வரும் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர்த் திட்டத்திலும் போதுமான நீர் கிடைக்கவில்லை. ஆயிரம் அடிக்கும் மேல் உள்ள ஆழ்துளைக் கிணறுகளும், விவசாயக் கிணறுகளும் தற்போது தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுகின்றன. பொதுமக்கள் விலை கொடுத்து தண்ணீர் வாங்கிப் பயன்படுத்தும் நிலையில், வறட்சியின் பிடியில் சிக்கி உள்ளனர்.
பல்வேறு கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் ஆழ்துளைக் கிணறு பழுதடைந்து சீர் செய்யாமல் உள்ளது. அவற்றை மாவட்ட நிர்வாகம் உடனடியாக கண்டறிந்து, போர்க்கால அடிப்படையில் சீர் செய்து பொதுமக்களுக்கு குடிநீர் வசதியை ஏற்படுத்த வேண்டும். இது மட்டுமின்றி, பொதுமக்கள் விவசாயம் செய்த பயிர்கள் அனைத்தும் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பகுதி மக்கள் பிரதானத் தொழிலாக கால்நடை வளர்ப்பு செய்து வருகின்றனர். தற்போது கடுமையான வறட்சியின் காரணமாக, கால்நடைகளுக்குத் தேவையான தண்ணீர் மற்றும் தீவனப் பற்றாக்குறையால் கால்நடைகளை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆதலால் மாவட்ட நிர்வாகம் சார்பில், கால்நடைகளுக்குத் தண்ணீர் மற்றும் தீவனம் மானியத்தில் ஏற்படுத்தித் தர வேண்டும்.
தேர்தல் ஆணையத்தின் விதிகளைத் தளர்த்தி, மாவட்ட நிர்வாகம் குடிநீர் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து ஒப்பந்தப் பணி ஆணை வழங்கி விரைவாகப் பணி மேற்கொள்வதற்கு அனுமதி அளித்தும், பொதுமக்களின் குடிநீர் பற்றாக்குறையைப் போக்கும் வகையில் தருமபுரி சட்டமன்றத் தொகுதியின் கிராம மற்றும் நகரப் பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் தண்ணீர் லாரி மற்றும் டிராக்டர் டேங் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
2024 நாடாளுமன்றப் பொதுத்தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் சீல் வைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையிலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாகத் திறக்கப்படாமல் உள்ளது வாக்குப்பதிவிற்கும், வாக்கு எண்ணிக்கைக்கும் இடைவெளி ஒன்றரை மாதத்திற்கும் மேல் உள்ளது. வாக்கு எண்ணிக்கை நீண்ட இடைவெளி இதுவரையிலும் தமிழகத்தில் இல்லை.
பொதுமக்கள் நேரில் அலுவலகத்திற்கு வந்து பல்வேறு குறைகளைத் தெரிவிப்பர். தற்போது சந்திக்க முடியாத காரணத்தால் குறைகளைத் தெரிவிக்க அவதியுற்று வருகிறார்கள். பொதுமக்களை நேரில் சந்தித்து குறைகளை போக்குகின்ற வகையில், தேர்தல் விதிமுறைகளைத் தளர்த்தி, சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தைப் பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டுமென" கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: பிஎஸ்ஓ பாதுகாப்புக்காக நாடகமாடிய இந்து முன்னணி பிரமுகர் கைது! - Hindu Munnani Executive Arrest