திருவண்ணாமலை: தங்கள் ஊருக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனவும், சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தங்கள் ஊருக்கு இதுவரை அவர் வந்ததே இல்லை எனவும் கூறி இன்று (ஏப்.06) வாக்கு சேகரிக்கச் சென்ற துணைச் சபாநாயகர் கு.பிச்சாண்டியின் காரை மறித்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் விரைவில் நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், பொதுமக்களிடம் தீவிரமாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில், திமுக சார்பில் திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சி.என்.அண்ணாதுரையை ஆதரித்து, தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி இன்று கீழ்பென்னாத்தூர் தாலுகாவிற்குட்பட்ட செல்லங்குப்பம் கிராமத்திற்கு வாக்கு சேகரிக்கச் சென்றுள்ளார். அப்போது பொதுமக்கள் அவரது காரை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து விசாரிக்கையில், கடந்த ஆண்டு செல்லங்குப்பம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயிலில் இரு சமூகத்தினர் சென்று வழிபாடு செய்வதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து ஊர் பொதுமக்கள், கீழ்பென்னாத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சட்டப்பேரவை துணைச் சபாநாயகருமான கு.பிச்சாண்டிக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆனால், அப்போது பிச்சாண்டி அப்பகுதியில் ஏற்பட்ட பிரச்சனைக்கு எந்த ஒரு தீர்வும் காணவில்லை எனவும், தங்கள் ஊருக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை எனவும் குற்றம் சாட்டினர். மேலும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தங்கள் ஊருக்கு அவர் இதுவரை வந்ததே இல்லை எனக் கூறி பிச்சாண்டியின் காரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் சி.என்.அண்ணாதுரை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரிக்கச் சென்ற தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி அப்பகுதியில் வாக்கு சேகரிக்காமல் வெளியேறினார். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்பு நிலவியது.