தஞ்சாவூர்: அடுத்து சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. திமுக அரசின் சாதனைகளைக் கூறி இங்குள்ள ஒவ்வொருவரும் அரசின் மூலமாக பிராண்ட் அம்பாசிடராக செயல்பட வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
தஞ்சாவூரில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் அறிவாலயத்தில் மறைந்த முரசொலி செல்வம் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர், மணிமண்டபம் பகுதியில் தஞ்சை தொகுதி எம்பி முரசொலி அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து தனியார் திருமண மண்டபத்தில் நடந்த திமுக கட்சி நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு பேசிய உதயநிதி ஸ்டாலின், "ஒரு காலத்தில் மகளிர் வீட்டை விட்டு வெளியே வர உரிமை கிடையாது, படிப்பதற்கு உரிமை கிடையாது என்ற நிலை இருந்தது. இந்த நிலை எல்லாவற்றையும் மாற்றியது திராவிட இயக்கம். மகளிரின் வளர்ச்சியே மாநிலத்தின் வளர்ச்சி என எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் தந்து கொண்டிருக்கிறார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் இதுவரை 1 கோடியே 16 லட்சம் மகளிர்க்கு உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இன்றைக்கு திமுகவை ஒழிப்பேன் என்று பல பேர் கிளம்பி இருக்கிறார்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தமிழ்நாட்டு மக்கள் அதற்கு சரியான பதிலடி கொடுப்பார்கள். அதிமுக பல்வேறு அணிகளாகப் பிரிந்து கிடக்கிறது. தனித்தனியாக நிற்கிற அதிமுகவும், யாருமே சீண்டாத பாஜகவும் திமுக கூட்டணியில் விரிசல் விழாதா என துண்டு போட்டுக் காத்திருக்கிறார்கள்.
ஆனால், நம்முடைய கூட்டணி வலுவாக உள்ளது. கூட்டணி கட்சி தலைவர்களும் வலுவாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். நம்முடைய பணிகளில் கவனம் செலுத்த வேண்டும். அடுத்து சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. திமுக அரசின் சாதனைகளைக் கூறி இங்குள்ள ஒவ்வொருவரும் அரசின் மூலமாக பிராண்ட் அம்பாசிடராக செயல்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோவி.செழியன், சிவசங்கர், டிஆர்பி ராஜா, சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திரசேகரன், நீலமேகம், மேயர் இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம்பூபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்