சென்னை: சென்னை நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் உதயநிதி கூறுகையில்,"முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கான நிதியைக் கடந்த வருடத்தைக் காட்டிலும் இந்த ஆண்டு முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார்.
அதன்படி 87 கோடியே 35 லட்சத்தை ஒதுக்கி இருக்கிறோம். இதில் பரிசு தொகை மட்டுமே 32 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. சென்ற வருடம் முதலமைச்சர் கோப்பை போட்டியில் தமிழ்நாடு முழுக்க ஐந்து லட்சத்திற்கு மேற்பட்ட விளையாட்டு வீரர்கள் பதிவு செய்து விளையாடினர். இந்த வருடம் மொத்தம் 12 லட்சம் வீரர்கள் பதிவு செய்து விளையாடி வருகின்றனர்.
பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பொதுமக்கள் என ஐந்து பிரிவுகளில் 36 வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றது. 15 நாட்கள் நடத்தப்பட்ட மாவட்ட மற்றும் மண்டல அளவிலான போட்டிகளில் 10,000க்கும் மேற்பட்ட நடுவர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் இதர ஊழியர்கள் பங்கேற்று இருக்கின்றனர்.
‘முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024’ - மாநில அளவிலானப் போட்டிகளில் தமிழ் நாடெங்கிலும் இருந்து கிட்டத்தட்ட 32 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர் - வீராங்கனைகள் பங்கேற்று வருகின்றனர்.
— Udhay (@Udhaystalin) October 14, 2024
மாநில அளவிலானப் போட்டிகளில் பங்கேற்கும் வீரர் - வீராங்கனையருக்கு தமிழ்நாடு விளையாட்டு… pic.twitter.com/Ao54gKwNYQ
இதனைத் தொடர்ந்து மாநில அளவிலான போட்டிகள் கடந்த நான்காம் தேதி தொடங்கியது. இதில் 32,700 வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். சென்னை, செங்கல்பட்டு, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட 19 இடங்களிலும் இறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பயிற்சியாளர்கள் மற்றும் இதர ஊழியர்கள் அந்தந்த மாவட்டங்களில் இருந்து போட்டி நடைபெறும் நகரங்களுக்கு சென்று வர போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: "பொதுத்தேர்வை பதற்றம் இல்லாமல் எழுதுங்கள்" - மாணவர்களுக்கு அன்பில் மகேஷ் அட்வைஸ்!
அதேபோல விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 150க்கும் மேற்பட்ட ஹோட்டல்களில் போதுமான வசதி செய்து வழங்கப்படுகிறது. முதலமைச்சர் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வருகின்ற 24ஆம் தேதி பரிசு மற்றும் கேடயங்கள் சான்றிதழ்களை வழங்க இருக்கின்றார்.
தமிழ்நாட்டின் மிகப்பெரிய விளையாட்டுத்துறைத் திருவிழாவான ‘முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024’ இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
— Udhay (@Udhaystalin) October 14, 2024
மாநில அளவிலானப் போட்டிகள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் நடைபெற்றும் வரும் நிலையில், சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில்… pic.twitter.com/nhSg6O77xa
இந்த போட்டிகளில் பங்கேற்கின்ற இளம் திறமையாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பதே முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியின் முக்கிய நோக்கமாகும். இந்திய துணை கண்டத்தின் விளையாட்டுத் துறையின் தலைநகராகத் தமிழ்நாடு அமைய அனைவரும் அயராது உழைப்போம். மழையினால் போட்டிகளுக்கு இடையூறு ஏற்பட்டாலும் ஓரிரு நாட்கள் கூடுதலாக நடத்தி சிறப்பாக நடத்தி முடிப்போம்" என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர்,"வடகிழக்கு பருவமழை தொடர்பாக கடந்த மூன்று மாதங்களாகவே தொடர்ந்து ஐந்து ஆய்வுக் கூட்டங்களை நடத்தி உள்ளோம். இன்று காலை மீண்டும் முதலமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளர், மூத்த அதிகாரிகள் தலைமையில் மீண்டும் ஒரு கூட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது.
எனவே இந்த முறை மழையை கண்டிப்பாகத் தமிழ்நாடு அரசு மற்றும் தமிழ்நாடு மக்கள் வெற்றிகரமாக கடந்து விடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. மழை அதிகமாக வருகிறதா? இல்லையா? என்பது மழை வந்த பிறகுதான் தெரியும். அப்படியே வந்தாலும் விளையாட்டு வீரர்களுக்கு தங்கும் வசதிகள், உணவு வசதிகள் அனைத்தும் சிறப்பாக செய்து கொடுப்போம்" என தெரிவித்தார்.