திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளையனூர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் அரசுக்குச் சொந்தமான மந்தவெளி புறம்போக்கு இடத்தில் வீடு கட்டியுள்ளதாக குற்றம் சாட்டிய அப்பகுதி மக்கள், அதனை அகற்றக் கோரி தாசில்தாரரிடம் பலமுறை மனுக்களை கொடுத்து வந்துள்ளனர்.
அதன் அடிப்படையில், நாட்றம்பள்ளி தாசில்தார் சம்பத் மற்றும் காவல் துறையினர் நேற்று (மார்ச் 15) சம்பவ இடத்திற்குச் சென்று, அனுமதி இன்றி அரசு இடத்தில் கட்டப்பட்டதாக, அந்த கட்டடத்தை ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த சுப்பிரமணியன் மகன் புனிதன் (30), தாசில்தார் சம்பத்தை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கொலை மிரட்டம் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து, அனுமதியின்றி அரசுக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டடத்தை, 15 நாட்களுக்குள் அப்புறப்படுத்த வேண்டும், இல்லையெனில் அரசாங்கம் அதனை அப்புறப்படுத்துவதுடன், அந்த இடத்தில் உள்ள கட்டுமானங்கள் பறிமுதல் செய்யப்படும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அரசுப் பணியை செய்ய விடாமல் தடுத்து, தாசில்தார்க்கு கொலை மிரட்டல் விடுத்த சுப்பிரமணியன் மகன்களான முகிலன், சத்யநாதன், புனிதன் ஆகிய மூவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ், நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில், நாட்றம்பள்ளி காவல்துறையினர், மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 'சிஏஏ சட்டம் வேண்டாம்' கோவையில் இஸ்லாமியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்!