ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த சித்தம்பாடி ஊராட்சி ராமாபுரத்தைச் சேர்ந்த விநாயகம் என்பவரின் மகள் பவித்ரா (5), ராஜேஷ் என்பவரின் மகன் குணா (5). இவர்கள் இருவரும் உறவினர்கள். இந்த நிலையில், குழந்தைகளின் தாத்தா குழந்தைகள் இருவரையும் தனது விவசாய நிலத்திற்கு அழைத்துச் சென்று, அதன் அருகில் விட்டுவிட்டு, அவர் விவசாய வேலைகளை கவனித்து வந்துள்ளார்.
அப்போது 100 நாள் வேலை திட்டத்தில் தோண்டப்பட்ட மீன் குட்டை உள்ள பகுதிக்கு குழந்தைகள் விளையாட வந்துள்ளனர். கடந்த நாட்களில் அரக்கோணம் சுற்றுவட்டாரப் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக, அந்த குட்டையில் மூன்றடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கி இருந்தது. மேலும், குட்டை நடுவில் சிலர் பள்ளம் தோண்டியிருந்ததால் அந்த பள்ளத்திலும் தண்ணீர் இருந்துள்ளது. இந்த நிலையில், விளையாடச் சென்ற குழந்தைகள் கால் தவறி குட்டையில் விழுந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
சில நிமிடங்களுக்குப் பிறகு, குழந்தைகளைக் காணவில்லை என அவரது தாத்தா தேடி பார்த்துள்ளார். அப்போது அங்குள்ள மீன் குட்டையில் பார்த்தபோது குழந்தைகள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் மூச்சுப் பேச்சின்றி கிடந்தனர். இதை அடுத்து, குழந்தைகளின் தாத்தா அங்கிருந்தவர்களின் உதவியுடன் இரு குழந்தைகளையும் மீட்டு, குருவராஜபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததாக கூறப்படும் நிலையில், திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
![உயிரிழந்த குழந்தைகள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/05-07-2024/21875601_child.jpg)
அங்கு குழந்தைகளை பரிசோதித்த மருத்துவர், அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியது. குருவராஜபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்கள் இருந்திருந்தால் குழந்தைகளின் உயிர்களைக் காப்பாற்றி இருக்கலாம் என்று குருவராஜபேட்டை பேருந்து நிலையத்தில் ராமாபுரம் மற்றும் சித்தாம்பாடி, குருவராஜபேட்டையைச் சேர்ந்த பொதுமக்கள், குழந்தைகளின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்து வந்த அரக்கோணம் எம்எல்ஏ ரவி, வட்டாட்சியர் ஸ்ரீதேவி, டிஎஸ்பி வெங்கடேசன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, குழந்தையின் உறவினர்கள், “குருவராஜபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவர்கள் இருக்க வேண்டும். அங்கு போதிய மருந்து மாத்திரைகளும் இருப்பதில்லை.
மேலும், 3 டாஸ்மாக் கடைகள் இருப்பதால் குருவராஜப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்வதற்கே வழியில்லாமல் உள்ளது. எனவே, மூன்று டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை தொடர்ந்து எம்எல்ஏ ரவி, குருவராஜப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர்களை நியமிக்கவும், டாஸ்மாக் கடையை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேசினார்.
அப்போது கிராம மக்கள் இடைமறித்து, எப்போது மருத்துவர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்? டாஸ்மாக் கடை எப்போது அகற்றப்படும் என்று தொடர்ந்து கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, எம்எல்ஏ ரவி இறந்த குழந்தைகளுக்கு அரசு நிவாரண உதவி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துவிட்டு அங்கிருந்து சென்றார். இந்த சாலை மறியலால் குருவராஜபேட்டையில் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: கும்மிடிப்பூண்டி இளைஞர் தீக்குளிப்பு விவகாரம்: அத்துமீறும் திமுக அரசு என அண்ணாமலை விமர்சனம் - Gummidipoondi Youth set fire