மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் பாலையூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட எழுமகளூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயக் கூலி தொழிலாளி சத்தியசீலன். இவர் கடந்த 2007 ஆம் ஆண்டு ஜூன் 21 ஆம் தேதி பெரம்பூர் பாலம் அருகில் நின்றிருந்த போது, சந்தேகத்தின் பேரில் அப்போதைய மதுவிலக்கு காவல் உதவி ஆய்வாளர் நாகராஜன், தலைமை காவலர் உத்திராபதி ஆகியோர் சத்தியசீலனை விசாரணைக்காக அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
அதன் பின்னர் சத்தியசீலன் காணாமல் போனதால், அவரது மனைவி வனிதா பெரம்பூர் மற்றும் பாலையூர் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளார். அதன் பின்னரும் சத்தியசீலன் கண்டறியப்படாத நிலையில், அவரை கண்டுபிடித்து தரக் கோரி வனிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் 2007 மற்றும் 2008ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் 27.04.2008-இல் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளது.
ஐந்து ஆண்டுகள் கடந்த பின்னரும் சத்தியசீலன் கண்டுபிடிக்கப்படாததால், இந்த வழக்கு 2013-ல் மத்திய குற்ற புலனாய்வு துறைக்கு (சிபிஐ) மாற்றப்பட்டது. ஆனால் சிபிஐ சத்தியசீலனை கண்டுபிடிக்க முடியவில்லை என அறிக்கை தாக்கல் செய்ததன் அடிப்படையில், இவ்வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. சத்தியசீலன் காணாமல் போன நாள்முதல் தனது மூன்று பெண் குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டில் வசித்து வந்த வனிதா, கடந்த ஜூன் மாதம் 3-ஆம் தேதி கிள்ளியூர் கிராமத்துக்கு விவசாயக் கூலி வேலைக்கு சென்றபோது பாம்பு கடித்து உயிரிழந்தார்.
சத்தியசீலன் காணாமல் போனபோது 4, 2 மற்றும் 1 வயது குழந்தைகளாக இருந்த அவரது மூன்று மகள்களும் தற்போது தாயும் உயிரிழந்த நிலையில், 17 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தங்களது தந்தையை தமிழ்நாடு அரசு சிறப்பு விசாரணை குழு (காவல்துறை) அமைத்து கண்டுபிடித்து தருமாறு மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் மனு அளித்து கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் டிப்ளமோ மருத்துவமனை நிர்வாக மேலாண்மை படித்துள்ள தானும், இரண்டு தங்கைகளும் தாய், தந்தை இல்லாமல் நிற்கதியாக உள்ள நிலையில், தங்களுக்கு அரசு சார்பில் வழங்கப்படும் வீட்டுமனை பட்டா மற்றும் குடியிருப்பு, அரசு வேலைவாய்ப்பு, நிவாரணத் தொகை வழங்கிட வேண்டுமென்று சத்தியசீலனின் மூத்த மகள் வர்ஷா தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், அவர்களின் இந்த மனு தமிழ்நாடு முதலமைச்சரின் தனி பிரிவுக்கும், காவல்துறை இயக்குனர் மற்றும் உள்துறை செயலாளர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பத்தாண்டுகளை கடந்த தமிழக அரசின் இலவச அமரர் ஊர்தி சேவை திட்டம்; 13.98 லட்சம் உடல்களை சுமந்து தொடரும் பணி! - Free Hearse Service