தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறை சார்பில் 'பரதநாட்டிய புலப்பாட்டில் நெடுநல்வாடை' என்ற கருத்தரங்கம் நடைபெற்றது. சங்க இலக்கியப் பனுவலான நெடுநல்வாடையை தமிழ் கலையாம் பரதக் கலையின் பின்புலத்தில் சித்தரிக்கும் புதிய முயற்சியாக அமெரிக்க வாழ் பரதநாட்டி்ய கலைஞரான பேராசிரியர் டாக்டர்.பிரதிபா பேட்லி, தனி வடிவமைப்பில் உருவான அரிய கலை வெளிப்பாட்டை பரதம் ஆடி வெளிக்காட்டினார்.
நெடுநல்வாடை சங்க இலக்கியப் பாடலில் 188 பாடல் வரிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பரத நடனக் கலைஞர் பிரதீபா பேட்லி பரத நாட்டியத்தில் உருவாக்கம் செய்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 12 ஆண்டுகளாக 'இயக்கம்' என்ற நாட்டிய நிறுவனத்தின் நிறுவனராகவும், 'டைச்சி சாங்கியோ' நிறுவனம் மற்றும் அமெரிக்கப் புள்ளியியல் கண்டுபிடிப்புத் துறை இயக்குநராகவும் உள்ளார். இவருக்குப் பரதக்கலையில் தேசிய விருது வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
இக்கருத்தரங்கம் குறித்து முனைவர் பிரதீபா பேட்லி கூறுகையில், "சங்க இலக்கிய பாடலான நெடுநல்வாடை பாடலை பரதநாட்டியத்தில் நடன உருவாக்கம் செய்துள்ளதாகவும், நெடியநல்வாடை என்பது சங்க காலத்தில் மழை எப்படி இருந்திருக்கும் என்பதை அழகாகவும், விரிவாகவும் சொல்லும் இலக்கியம் என்றும் தெரிவித்துள்ளார். பரத நாட்டியத்தில் சாதி, மதம் அடையாளம் இருக்கக் கூடாது என்பதற்காக இயக்கம் என்ற நிறுவனம் தொடங்கியதன் அடுத்தகட்ட முயற்சி தான் இது" என்று கூறினார்.
மேலும் இவ்விழாவில் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் திருவள்ளுவன், பதிவாளர் தியாகராஜன், அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித்துறைத் தலைவர் குறிஞ்சிவேந்தன் உள்ளிட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் பரதநாட்டியத்தில் சங்க இலக்கிய பாடலான நெடுநல்வாடையைக் கண்டு ரசித்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: ஆடி அமாவாசை; தமிழகம் முழுவதும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு!