தேனி: கம்பம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஆர்.ராமச்சந்திரன் (78) உடல்நலக்குறைவால் நேற்று (செப்.4) பிற்பகல் காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு கட்சியினர் மற்றும் அமைப்பின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அவரது உடலுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் நேரில் சென்று நேற்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பதவிகள்: இவர் கம்பம் சட்டமன்றத் தொகுதியில் 1991ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளராகவும், 1996 மற்றும் 2001 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வேட்பாளராகவும் போட்டியிட்டு 3 முறை தொடர்ந்து கம்பம் எம்எல்ஏவாக பணியாற்றினார்.
மாநில இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர், தமிழ் மாநில காங்கிரஸ் பிரிந்தபோது தேனி மாவட்ட தலைவர், பின்னர் மாநில துணைத் தலைவர், கள்ளர் கல்விக் கழகத்தின் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். தற்போது தமிழ் மாநில காங்கிரஸில் மாநில தேர்தல் பணிக்குழு உறுப்பினராகவும், கட்சியின் உயர்மட்டக் குழு உறுப்பினராகவும், தேர்தல் பிரிவு மாநிலத் தலைவராகவும் இருந்தார்.
இதையும் படிங்க: "புதிய கட்சி தொடக்கம் ஆரவாரமாகத்தான் இருக்கும்".. தவெக குறித்து ஜி.கே.வாசன்!
கடந்த சில மாதங்களாகவே வயது மூப்பால் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், நேற்று பிற்பகல் உயிரிழந்தார். இவருக்கு அபர்ணா, பிரவீனா, சரண்யா ஆகிய 3 மகள்கள் உள்ளனர். மனைவி சகுந்தலா கடந்த 20 ஆண்டுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். இந்நிலையில், அவரது உடலுக்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
ஜி.கே.வாசன் அஞ்சலி: இந்நிலையில், கம்பத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல்களைத் தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், “ஓ.ஆர்.ராமச்சந்திரன் நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்தவர். ஜி.கே.மூப்பனாரின் மிக நெருங்கிய உறவாக இருந்தவர். எங்களைப் போன்ற கட்சியினருக்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக திகழ்ந்தவர். கறை படாத கரங்களுக்கு சொந்தக்காரராக வாழ்ந்தவர். இவரது இழப்பு கட்சிக்கும், அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் பேரிழப்பாகும்.
கம்பம் தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓ.ஆர்.ராமச்சந்திரன் உயிரிழந்ததைத் தொடர்ந்து கம்பம் வர்த்தகசங்கம் சார்பில் இன்று கடையடைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரது இறுதிச் சடங்கு இண்று (அக்.5) கம்பத்தில் நடைபெறுகிறது.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்