கடலூர்: கடலூர் மாவட்டம், சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த 24 பேர் உட்பட 30 தமிழர்கள் உத்தரகாண்ட் மாநிலத்துக்கு ஆன்மிகச் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு அவர்கள் நேற்றிரவு ஆதி கைலாசம் எனும் ஆன்மீக தளத்திற்கு வாகனத்தில் பயணித்து கொண்டிருந்தனர்.
ஆதி கைலாசத்தை நெருங்கி கொண்டிருந்தபோது, 18 கிலோமீட்டர் தொலைவில் சாலையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் அவர்கள் மேற்கொண்டு பயணத்தை தொடர முடியாமல் அங்கு சிக்கித் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அவர்களுக்கு என்னவானதோ என்று எண்ணி அவர்களின் சொந்த, பந்தங்கள் பதற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து நமது ஈடிவி பாரத் செய்தியாளர் கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது, "உத்தரகாண்டில் ஆதி கைலாஷ் மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு அங்கு சிக்கியுள்ள தமிழர்களின் நிலை குறித்து கேட்டறிந்தேன். 'அவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர்' என்று அவர் தெரிவித்தார்.
வானிலை சீரடைந்ததும் அவர்கள் அனைவரையும் ஹெலிகாப்டர் மூலம் மீட்டு தமிழகம் திரும்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அங்கு அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், தங்குமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன" என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.
சிதம்பரத்தை சேர்ந்த 24 பேர் மற்றும் சீர்காழி, ராணிப்பேட்டை, பெங்களூருவைச் சேர்ந்த தலா இரண்டு பேர் என மொத்தம் 30 பேர் தமிழ்நாட்டில் இருந்து உத்தரகாண்டிற்கு அண்மையில் ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர்.
முன்னதாக, உத்தரகாண்டில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை பத்திரமாக மீட்டு தமிழகம் அழைத்து வருவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கடலூர் மாவட்ட ஆட்சியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியானது.
உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
— M.K.Stalin (@mkstalin) September 15, 2024
அங்கு பாதுகாப்பாக உள்ள தமிழர்களில் ஒருவரான திருமிகு. பராசக்தி அவர்களைத் தொடர்புகொண்டு பேசினேன்.
பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலமுடன் தங்களது ஊருக்குத் திரும்ப… pic.twitter.com/TEHjsiRvYT
தொலைபேசியில் தொடர்பு கொண்ட முதல்வர்: இதனிடையே, உத்தரகாண்டில் சிக்கியுள்ள தமிழர்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், "உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். அங்கு பாதுகாப்பாக உள்ள தமிழர்களில் ஒருவரான திருமிகு. பராசக்தி அவர்களைத் தொடர்புகொண்டு பேசினேன். பாதிக்கப்பட்டுள்ளவர்கள் நலமுடன் தங்களது ஊருக்குத் திரும்ப அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம்!" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் அப்டேட்: இதனிடையே, கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், "உத்தரகாண்டிற்கு ஆன்மீக சுற்றுலா சென்ற அனைவரும் நலமுடன் இருப்பதாகவும் 3 ஹெலிகாப்டர்கள் மூலம் இதுவரை 15 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில் எஞ்சியவர்கள் உடனடியாக மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது" என்றும் தெரிவித்தார்.
மேலும் "இவர்களை மீட்பதற்கு தமிழக அரசு முழு அளவில் முயற்சி மேற்கொண்டதால் விரைவில் மீட்கப்பட்டதாகவும் மீட்பு நடவடிக்கையில் துரிதம் காட்டிய தமிழக அரசுக்கு கடலூர் மாவட்ட மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், "மீட்கப்பட்டவர்களிடம் தமிழக முதல்வர் நலம் விசாரித்ததாகவும் அவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருப்பதாகவும் அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தர தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளதை தொடர்ந்து அவர் அனைவரும் மீட்கப்பட்டு விரைவில் தமிழகம் திரும்புவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது" எனவும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.