சென்னை: தமிழ்நாட்டில் முதல் முதலாக தோற்றுவிக்கப்பட்டப் பல்கலைக்கழகம் சென்னைப் பல்கலைக் கழகம். இந்தப் பல்கலைக் கழகத்தில் மருத்துவம், சட்டம், பொறியியல், வேளாண்மை, கலை மற்றும் அறிவியல் என அனைத்து துறைகளும் செயல்படுகின்றன. அதன் பின்னர் மாநில அளவில் புதியப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டு, சென்னை பல்கலைக் கழகத்தின் எல்லையும் தற்பொழுது குறைக்கப்பட்டுள்ளது.
சென்னைப் பல்கலைக்கழகம் ஏற்கனவே நிதி நெருக்கடியில் சிக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த கவுரி அக்டோபர் மாதம் பணி ஒய்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திக் தலைமையில் வழிகாட்டுதல் குழு அமைக்கப்பட்டு, நிர்வாகம் நடைபெற்று வருகிறது.
முக்கிய முடிவுகளை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் குழு ஒப்புதலுக்கு பிறகே நிறைவேற்றப்படுவது நடைமுறை வழக்கமாகும். அந்த வகையில் மாதம் ஒருமுறை சிண்டிகேட் கூட்டம் நடத்தப்பட வேண்டும். ஆனால் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக கவுரி பதவியில் இருந்த போது மூன்று மாதங்கள் நேரடியாக சிண்டிகேட் கூட்டத்தை நடத்தவில்லை என கூறப்படுகின்றது.
தற்போது அவரது பதவிக்காலம் முடிவடைந்து சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி 5 மாதங்களாக காலியாக இருக்கும் நிலையில், சிண்டிகேட் கூட்டம் தொடர்ந்து நடத்தப்படாமலே உள்ளது. உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திக் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக வழிகாட்டுதல் குழு துணை இல்லாத போதும் சிண்டிகேட் கூட்டத்தை நடத்தலாம்.
ஆனால் சிண்டிகேட் கூட்டம் நடத்தப்படாமலே இருந்து வருகிறது. இதனால் பல்கலைக்கழகம் சார்ந்த பல முக்கிய நிர்வாக முடிவுகளை எடுக்க முடியாத நிலையில் உள்ளது. இதனிடையே, பல்கலைக்கழகத்திற்கான துணைவேந்தரை நியமனம் செய்வதில், தமிழ்நாடு ஆளுநருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் தேடுதல் குழு விவகாரத்தில் முரண்பாடுகள் இருந்து வருகின்றன.
இதனால் துணைவேந்தரை நியமிப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. இதனால் சென்னை பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் தேர்ந்தெடுத்து எப்போது நியமிக்கப்படுவார் என்பது குறித்து தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த 8 மாதங்களாக சிண்டிகேட் குழு கூட்டம் நடத்தப்படாமல் இருப்பது பல்கலைக்கழக நலனை பாதிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.
இதனிடையே, உடனடியாக உயர்கல்வித்துறை செயலாளர் தலைமையில் உள்ள வழிகாட்டுதல் குழு சிண்டிகேட் கூட்டத்தை உடனடியாக நடத்திட வேண்டும் என்கின்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழுவின் முன்னாள் துணைத்தலைவர் தேவராஜ் கூறும்போது, "சென்னைப் பல்கலைக் கழகத்தின் சிண்டிக் கேட் கூட்டம் நடத்தப்படாமல் உள்ளது.
இதனால் அன்றாட பணிகளில் எந்தவிதமான பாதிப்பும் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் முக்கியமான முடிவுகளை எடுக்க முடியாத நிலை உள்ளது. பல்கலைக்கழகத்தில் பணியாற்றுபவர்களுக்கான சம்பளம், தொலைத்தூர கல்வி மையத்தின் நிதியில் இருந்து வழங்கப்படுகிறது. சென்னை பல்கலைக் கழத்தின் நிதிநிலையை சரி செய்ய அரசு நிதியுதவி வழங்கிட வேண்டும்.
துணை வேந்தரை நியமனம் செய்வதற்கான சிண்டிகேட் கூட்டத்தின் பிரதிநிதியை அரசு நியமிக்க முடியும். ஆனால், பல்கலை மானியக்குழுவின் விதிகள் 2018 சென்னைப் பல்கலைக் கழகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அது நடைமுறைக்கு வரவில்லை. இதனால் பல்கலைக் கழக மானியக்குழுவின் பிரதிநிதி நியமனம் குறித்து அரசு தான் முடிவு எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: 10 ஆண்டுகளில் 7 முறை கூட்டணி தாவல்! இந்த முறை நிதிஷின் யோசனை சாத்தியமாகுமா?